ஊழியர்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற நபர்: நீதிமன்றம் கடும் தண்டனை
கனடா நாட்டில் தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நிகழ்த்தி கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Nanaimo என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நகரில் உள்ள Western Forest Products என்ற தொழிற்சாலையில் கெவின் அடிசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு கெவினுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு பிறகு வீடு திரும்பிய கெவின் நடந்தவற்றை நினைத்து மன உளைச்சலில் தவித்துள்ளார்.
பின்னர், இத்தனைக்கும் காரணமான அவர்களை கொல்ல வேண்டும் என தீர்மானித்த கெவின் ஒரு நீண்ட துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தொழிற்சாலைக்கு சென்றுள்ளார்.
கடும் கோபத்தில் சென்ற கெவின் கட்டிடம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நிகழ்த்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் Michael மற்றும் Fred McEachern ஆகிய இருவர் பரிதாபமாக பலியாயினர். மேலும், Tony Sudar மற்றும் Earl Kelly ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.
இக்குற்றங்கள் தொடர்பாக கெவின் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய இரண்டு பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது சக ஊழியர்களை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக கெவினிற்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு கெவினை பரோலிலும் வெளியே விடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.