தேர்தலில் இழந்த பதவிகளையும், அரசியல் கதிரைகளையும் மீண்டும் பிடிப்பதற்காக அரசியல் கைதிகளின் உயிரைப் பயன்படுத்தி ஊர்ப் பிள்ளைகளைச் சாவடித்து அதில் அரசியலை செய்ய வேண்டாம் என்று கஜேந்திரகுமார் அணியினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேசிவரும் கஜேந்திரகுமார் இத்தனை ஆண்டுகளில் ஒரு தடவையாவது சிறைச்சாலைக்குச் சென்று அவர்களைச் சந்தித்துக் கதைத்துள்ளாரா? தமிழ் மக்களைச் சாவடித்து அதில் அரசியல் இலாபம் காணும் செயல்களை உடனடியாக இவர்கள் கைவிட வேண்டும்.
இவ்வாறு ஆணித்தரமாகத் தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
‘‘அரச தலைவர் மைத்திரிபாலவின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது நீதிமன்றம் போராட்டங்களுக்குத் தடைவிதித்து விட்டதாக வந்த பத்திரிகைச் செய்தியைப் பார்த்து பம்மிய கஜேந்திரகுமார், நான் போராட்டக்களத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிந்தவுடன் ஓடி வந்து ஆட்களோடு ஆட்களாக நின்று விட்டு நான் மைத்திரியுடன் இரகசிய தொடர்பில் இருப்பதாக ஆதார மில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைக் கின்றார்’’ என்றும் அவர் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சிவாஜிலிங்கம் அரசுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகிறார் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றுமுன்தினம் குற்றஞ்சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், யாழ்பாடி விருந்தினர் விடுதியில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சிவாஜிலிங்கம்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
ஆளுநரைக் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து நிலமையை எடுத்துக் கூறி அரச தலைவரை இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காணுமாறு கோரினோம்.
அரச தலைவர் இங்கு வரும்போது அவருக்கு எதிராகக் கவனவீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம், அதன் பின்னர் வேண்டுனாமால் நாம் அவருடன் கதைக்கலாம் என்றேன்.
இதுதான் ஆளுநருக்கும் எமக்கும் இடையில் சந்திப்பில் பேசப்பட்டது. இதையறியாத சிலர் பொய்யாக நான் பல மணி நேரமாக ஆளுநருடன் உரையாடினேன் என்கின்றனர்.
நானும் ஆளுநரும் பல மணிநேரம் கதைக்க நாங்கள் என்ன காதலர்களா?
தேர்தலில் இழந்த பதவிகளையும், அரசியல் கதிரைகளையும் மீண்டும் பிடிப்பதற்காக அரசியல் கைதிகளின் உயிரைப் பயன்படுத்தி ஊர்ப் பிள்ளைகளைச் சாவடித்து அதில் அரசியல் செய்யவேண்டாம் என்று கஜேந்திரகுமார் அணியினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேசிவரும் கஜேந்திரகுமார் இத்தனை ஆண்டுகளில் ஒரு தடவையாவது சிறைச்சாலைக்குச் சென்று அவர்களைச் சந்தித்துக் கதைத்துள்ளாரா? தமிழ் மக்களைச் சாவடித்து அதில் அரசியல் இலாபம் காணும் செயல்களை உடனடியாக இவர்கள் கைவிட வேண்டும்.
பொது இடங்களில் சம்பந்தனையும் சுமந்திர னையும் தூற்றுவதை விட இவருக்கு அரசியல் தெரியுமா? தனது பேச்சுக்களில் இந்த இருவரின் பெயர்களையும் இழுக்காது அரசியல் கதைக்கத் தெரியாது அவருக்கு.
நாம் மறக்கவில்லை
கஜேந்திரகுமார் கடந்த கால நிகழ்வுகளை மறந்து அல்லது மறைத்துப் பொய்யான பரப்புரைகளை மக்கள் மத்தியில் முன்வைத்து வருகின்றார். ஆனால் தமிழ் மக்கள் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற 2009ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகள் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மகிந்தவின் சகோதரர் பசிலுடன் இரகசியமாக அலைபேசியில் உரையாடிய கஜேந்திரகுமார் இது தொடர்பாகவோ அல்லது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலோ ஐ.நா. சபையில் ஒரு தடவையேனும் சாட்சியமளிக்காமை பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது.
இறுதிப் போரில் நடந்தவற்றை மறைத்துவரும் கஜேந்திரகுமார் ஜெனிவாவில் நாம் உரையாற்றும்போது பின்வரிசையில் ஒளித்து இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு இங்கு வந்து தேசியம் கதைத்து மக்களை முட்டாளாக்கும் செயல்களையே செய்துவருகின்றார். மக்கள் எல்லாவற்றையும் அறிந்து வைத்துள்ளனர்.
இங்கு இலங்கை அரசுக்கு எதிராகக் கொக்கரித்து வரும் அவர், ஒரு நாளாவது பன்னாட்டு அளவிலும் ஐ.நாவிலும் மைத்திரி, ரணிலுக்கு எதிராக ஏதாவது ஒரு கருத்தையாவது முன்வைத்திருப்பாரா? இவ்வாறான ஒருவரின் அரசியலை மக்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.
ஊருக்குத்தான் உபதேசம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தூற்றி வரும் கஜேந்திரகுமார் தனது காங்கிரஸ் கட்சியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக மாற்றியுள்ளார்.
அதனை இன்றுவரை பதிவு செய்யாமல் இருந்து கொண்டு மற்றவர்களை இவர் தூற்றுவது சரிதானா ?
தனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் என்று அரசியல் செய்து வரும் அவரும் அவரது குழுவினரும் மக்கள் மத்தியில் பொய்யான வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தவேண்டும்.
அவருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சவால் விடுக்கின்றேன். அவர் தூய அரசியல்வாதி என்றால் என்னுடன் நேரடி விவாதத்துக்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றேன்-– என்றார்.