நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் தளபதியுமான விமல் வீரவன்சவின் விடுதலை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பெருந்தொகை அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வீரவன்ச, மூன்று மாதங்களின் பின்னர் இன்று நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இரண்டாவது முறையாக கோட்டை மேலதிக நீதவான் லங்கா ஜயரத்னவிடம் முன்வைக்கப்பட்ட விசேட காரணங்களுக்கமைய இன்றைய தினம் இந்த பிணை வழங்கப்பட்டிருந்தது.
தந்தை மீது மகள் கொண்டிருந்த அதீத அன்பு காரணமாக கருணை அடிப்படையில் வீரவன்சவுக்கு பிணை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விமல் வீரவன்ச உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டிருந்த போது அவரின் மகள் அதீத மன உளைச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மகள் தொடர்பில் உரிய வைத்திய அறிக்கை எதுவும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமையினால் கடந்த முறை வீரவன்சவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
எனினும் மகள் தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. விமல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போதிலும் மகளின் மன அழுத்தம் இன்று வரையில் குறையாமல் இருந்தமை ஆச்சரியமாகவே உள்ளது.
எப்படியிருப்பினும் 16 வயதுடைய யுவதி ஒருவர் 12 வயதுக்கும் குறைவான சிறுவர் வாட்டில் சிகிச்சை பெற்றதெப்படி என்பது தொடர்பில் தகவல் வெளியிடாமலேயே விமல் இன்றைய தினம் பிணையில் விடுதலையாகியிருந்தார்.
50000 ரொக்க பிணை மற்றும் 5 இலட்சம் பெறுமதியான 2 சரீர பிணையிலும் விமல் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பிணை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அம்பியுலன்ஸ் வண்டியில் நோயாளியை போன்று வீரவன்ச நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
எனினும் பிணை பெற்றுக் கொண்டு திரும்பி செல்லும் போதும் அம்பியுலன்ஸ் வண்டியை சுற்றியிருந்தவர்களுக்கு கை அசைத்தவாறு சென்றுள்ளார்.
ஆதரவாளர்களுக்கு கைகளை அசைத்தவாறு அம்பியுலன்ஸ் வண்டியில் சென்ற உலகின் ஒரே தலைவர் வீரவன்சவாக தான் இருக்க முடியும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
அண்மையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு சிகிச்சை வழங்காமல் மரணிக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த அரசாங்க வைத்தியர்கள், வீரவன்ச போன்ற ஒருவருக்கு எவ்வித நோயும் இல்லாத நிலையிலும் அம்பியுலன்ஸ் வண்டியில் அனைத்து வசதிகளையும் வழங்கியிருந்தனர்.
இன்றைய தினம் அரசாங்க வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட நிலையில், நோயாளிகளுக்கு எவ்வித சிகிச்சையும் வழங்காத போதிலும், நோயற்ற விமலுக்கு இவ்வாளவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.