உலக நாடுகள் மனிதாபிமான நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றன
உலக நாடுகள் மனிதாபிமான விடயம் சார்ந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும் 1945 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடி இதுவே ஆகும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்களை கையாளும் தலைவர் ஸ்டெஃபன் ஓ பிரியன் (Stephen O’Brien) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “தற்போது 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். யேமன், சோமாலியா, தென் சூடான் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடும் பட்டினிக் கொடுமையால் அவதியுற்றுள்ளனர்” என தெரிவித்தார்.
இந்த கடும் பட்டினியால் உயிரிழப்போர் தொடர்பில் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த Unicef அமைப்பு, இவ்வருடத்திற்குள் சுமார் 1.4 மில்லியன் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் உயிரிழக்கலாம் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் சுமார் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என ஸ்டெபன் தெரிவித்துள்ளார்.