உலக ஓட்டத்திற்கேற்ப நாம் எமது இளைய தலைமுறையைத் தயார்ப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி சிவபுரம் அ.த.க.பாடசாலையின் வகுப்பறைத் தொகுதிக் கட்டிடத் திறப்புவிழா இன்றைய தினம்(06) காலை 10.30 மணியளவில் மேற்பட பாடசாலையின் அதிபர் சி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வகுப்பறைக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
இப்படியான நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொண்ட வேளைகளிலும் இந்த மாணவச் செல்வங்களும் ஏனைய மாணவர்கள் போல வசதி வாய்ப்புடன் கூடிய வகுப்பறைக் கட்டிடங்களில் இருந்து கல்வி கற்க வேண்டும் என்பதில்
இப்பாடசாலையின் அதிபர் நந்தகுமார் அவர்கள் எடுத்த முயற்சிகளும் இப்பாடசாலைக்கு இந்த வகுப்பறைக் கட்டிடத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயற்பட்ட முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் முருகவேல் அவர்களது முயற்சிகளும் கண்டாவளைப் பிரதேச செயலாளர் முகுந்தன் அவர்களது ஒத்துழைப்பும் மிக முக்கியமான ஒன்றாகும்.
இவ்வேளையில் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒரு பாடசாலை இவ்விடத்தில் உருவாகுவதை சிலர் விரும்பாமல் பல தடங்கல்களையும் முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி வந்தார்கள்.
அவற்றையெல்லாம் எதிர்கொண்டு இந்தப் பிள்ளைகள் இவ்விட்த்தில் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பதற்காக நாம் முயற்சித்து இப்பாடசாலைக் கட்டிடம் அமையப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியானது.
இப்பகுதியில் இன்னுமின்னும் பல வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவைகள் நிறைந்து காணப்படுகின்றன. அடிக்கடி வெள்ளம் வந்து தாக்குவதும் சிவபுரம்தான் வெய்யிலால் பாதிக்கப்படுவதும் சிவபுரம்தான். இப்பகுதிக்கு பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளன.
சிவபுரம் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் பெறுதல், வீட்டுத்திட்டங்களைப் பெறுதல் ஆகியவற்றில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கிய வேளையிலும் அதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அது தற்போது வெற்றியளித்திருக்கின்றது.
இப்பகுதியில் 250 வீடுகள் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்றன. உங்களது தொடர்ச்சியான முயற்சிகள் உங்களது கிராமத்தின் வளர்ச்சி பற்றி நீங்கள் எடுத்து வரும் செயற்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவையாகும். உங்களது தேவைகள் நிறைவு செய்யப்படும்.
உலக ஓட்டத்திற்கேற்ப நாம் எமது இளைய தலைமுறையைத் தயார்ப்படுத்த வேண்டும். எமது பிள்ளைகள் மிகவும் ஆர்வமுடையவர்கள் அவர்களுக்கான சகல வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி முன்நோக்கிச் செல்ல வேண்டும் என்றார்.
சிவபுரம் அ.த.க.பாடசாலை வகுப்பறைத் தொகுதிக் கட்டிடத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள், கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் க.முருகவேல், கௌரவ விருந்தினராக கண்டாவளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.இராஜகுலசிங்கம் மற்றும் பரந்தன் கிராம அலுவலர், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பதுடன் கலந்துகொண்டவர்களால் பாடசாலைச் சூழலில் மரங்களும் நாட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.