உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முந்தியுள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போனஸ் தவிர விளம்பர ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் அதிக வருவாயின் அடிப்படையில் வீரர்களை மதிப்பீடு செய்து போர்ப்ஸ் பத்திரிகை வரிசைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் மிகவும் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பிரபல கால்பந்து நட்சத்திரம் மெஸ்சியை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முந்தியுள்ளார். ரூ.94 கோடி மதிப்புடன் கோலி 7-வது இடத்தில் உள்ளார். ரூ.87 கோடி மதிப்புடன் மெஸ்சி 9-வது இடத்தில் உள்ளார்.
மெஸ்சியை முந்தும் அளவுக்கு விராட் கோலி மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். தனது அபாரமான ஆட்டம் மூலம் வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறார்.
மிகவும் மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) முதல் இடத்தில் உள்ளார். அவரது விளம்பர வருவாய் மதிப்பு ரூ.240 கோடியாகும்.
100 மீட்டர் ஓட்டத்தின் உலக சாதனையாளரான உசேன் போல்ட் (ஜமைக்கா) 3-வது இடத்திலும் (ரூ.174 கோடி), கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) 4-வது இடத்திலும் (ரூ.139 கோடி), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் (அமெரிக்கா) 6-வது இடத்திலும் (ரூ.107 கோடி) உள்ளனர்.
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி, கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் சிறப்பாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். சமீபத்தில் 31-வது ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்த அவர், தெண்டுல்கருக்கு அடுத்த சாதனை வீரராக உருவெடுத்து வருகிறார்.