தமிழ் மக்களின் உரிமைகளையும், எங்கள் இனத்திற்கு கிடைக்க வேண்டிய விடுதலையையும் விற்பனை செய்யும் ஒரு அரசியல்வாதி நான் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சிலரின் அரசியல் தேவைக்காக எனக்கு எதிராக ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக போலியான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாக அவர் இதன் போது குற்றம் சுமத்தியுள்ளார்.
கற்றல் நடவடிக்கைகளுக்காகவே நான் பெல்ஜியம் சென்றிருந்தேன். எனினும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுப்பதற்காக அங்கு சென்றதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் என்றால் என்ன? அதில் என்ன நடந்தது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் பின்னரே அந்த கூட்டத்தில் நான் கலந்துகொண்டேனா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
அவ்வாறில்லை அந்த கூட்டத்தில் நான் கலந்துகொண்டதை உறுதிப்படுத்துவார்களாக இருந்தால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவும் தயார்! சி.சிறீதரன் எம்.பி
இலங்கை அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவேண்டும் என்பதற்காகவே நான் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்
அத்துடன், நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை நாடாளுமன்றில் உள்ள கணக்காய்வு குழு மற்றும் முறைப்பாட்டு குழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறேன்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றில் உள்ள குழுக்கள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன? நடைமுறைகள் என்ன? என்பன போன்ற விடயங்களை அறிந்து கொள்வதற்கான செயலமர்வுக்காகவே நான் பெல்ஜியம் சென்றிருந்தேன்.
இதன்போது வெளியே புகைப்படம் எடுத்து கொண்டபோது அதில் நிர்பந்தத்தின் அடிப்படையில் நிற்க வேண்டியதாயிற்று.
ஆனால் இங்கே சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவை எங்கள் மீது கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமேயாகும் என அவர் கூறியுள்ளார்.
நான் இலங்கை அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.பி வரி பிளஸ் சலுகையை பெற்று கொடுப்பதற்காகவே பெல்ஜியம் சென்றேன் எனவும், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக செயற்பட்டேன் எனவும் எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
இதேவேளை, நான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி நடப்பவன் அல்ல. அவ்வாறான சமூகத்தில் நான் பிறக்கவும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.
இளைஞர், யுவதிகள் வீதியிலே போராடி வரும் நிலையில் பதவிக் கதிரைகளுக்காக மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது பொருத்தமற்றது
எங்களுடைய இளைஞர், யுவதிகள் வீதியிலே போராடி வரும் நிலையில் பதவிக் கதிரைகளுக்காக மாத்திரம் நாங்கள் பேசிக் கொண்டிருப்பது பொருத்தமற்ற விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தற்போது எங்களுடைய மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்காகத் தெருவிலே போராடி வருகிறார்கள்.
அத்துடன் எங்களுடைய மக்கள் சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாமல், அரசியல் கைதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமலிருக்கும் சூழலில், வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தர வேண்டும் என்று எங்களுடைய இளைஞர், யுவதிகள் போராடி வரும் நிலையில் வெறுமனே பதவிக் கதிரைகளுக்காக மாத்திரம் நாங்கள் பேசிக் கொண்டிருப்பது பொருத்தமற்ற விடயமாகும் எனவும் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் ஆயுட் காலம் அடுத்த வருடம் முடிவடையும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தாங்கள் பிரேரிக்கப்படவுள்ளதாகச் சிங்களப் பத்திரிகையொன்று நேற்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளரொருவர் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது போன்ற சில கோமாளித்தனமான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அரசாங்கம் அதற்கான சில குழறுபடியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை ஒரு முதலமைச்சராக உருவாகக் கூடிய தகுதியை இன்னும் நான் பெறவில்லை. தவறான வழிகாட்டலை என்னுடைய இனத்திற்கு வழங்க நான் தயாராகவில்லை.
நான் ஒரு இனத்தின் விடுதலைக்காக, தமிழ்மக்களுடைய தேசிய அபிலாசைகளை நிறைவு செய்கின்ற, அவர்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற ஒருவராக நான் அரசியலுக்குள் பிரவேசித்திருந்தேன்.
எங்களுடைய கட்சியில் மூத்த தலைவர்களிருக்கிறார்கள். உரிய காலப் பகுதிகளில் மூப்பின் அடிப்படையில், சேவையின் அடிப்படையில் முடிவுகள் எட்டப்படும்.
அதற்கான காலங்கள் கனியும் போது இது தொடர்பான விடயங்கள் ஆராயப்படும். இப்போது இவ்வாறான விடயங்கள் ஆராயப்பட வேண்டிய தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பான மூலங்களை வெளியிட்டுள்ள ஊடகத்திடம் இது குறித்த கேள்வியை கேட்பது பொருத்தமானதாக இருக்கும் எனவும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.