உரிமைகளுக்காக போராடிய தமிழினம் இன்று வாழ்வதற்கும் போராடிக் கொண்டிருக்கின்றது
கேப்பாபுலவில் நிலம்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக போராடுவதற்கு கட்சிபேதங்களுக்கு அப்பால் அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் இணைந்து போராட முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் எங்கும் இல்லாத கொடுமை வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுவருகின்றது.
தமது சொந்த நிலங்களில் சுதந்திரமாக வாழும் உரிமை இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமே மறுக்கப்பட்டுவருகின்றது.
இந்த நாட்டில் உரிமைகளுக்காக போராடிய தமிழினம் இன்று வாழ்வதற்கும் போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
தமிழ் மக்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தமது சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவுமே இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்தினர்.
ஆனால் இந்த அரசாங்கம் சொல்லாட்சி அரசாங்கமாக மட்டுமே இருந்துவருகின்றது.தமிழ் மக்களுக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தும் எந்த செயற்பாட்டினையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நீண்டகாலமாக தமது காணிகளை இழந்திருந்த கோப்பாபுலவு மக்கள் தமது காணிகளை கோரி தொடர்ச்சியான முறையில் கடந்த 31ஆம் திகதியில் இருந்து போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.
இவர்களின் போராட்டங்களில் நாங்கள் வெறும்பார்வையாளர்களாக இருக்கமுடியாது.
தமிழ் மக்களின் உரிமைகளைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராட்டங்களில் இணைந்து கடந்த காலத்தில் போராட்டங்களை நடாத்தினோம்.
இங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகளும் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களுக்காக போராட வந்தவர்களே.
எனவே கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக அணிதிரண்டு போராடவேண்டிய அவசியம் இன்று அனைத்து தமிழ் தலைமைகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இதில் அரசியல்வேறுபாடுகளோ அரசியல் நோக்கங்களோ இல்லாமல் அனைவரும் இணைந்து போராடுவதற்கு முன்வரவேண்டும்.இல்லாதுபோனால் அது அந்த மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகவே அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.