உயர் இராணுவ அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்த மாணவன்
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எதிராக பிரபல பாடசாலையொன்றின் மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி தனது கழுத்தை பிடித்து அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி சாதாரண தர மாணவன் நேற்றைய தினம் குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் தான் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும், சாதாரண தர பரீட்சை இடம்பெற்றமையினால் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. நேற்றைய தினம் பரீட்சை நிறைவடைந்தவுடனே பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்ததாக மாணவன் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண தர பரீட்சையின் ஓய்வு நேரத்தின் போது வாகனம் ஒன்றில் வருகைத்தந்தவர், தனது கழுத்தை பிடித்து எலும்பை நொருக்கி விடுவேன் என கூறினார். தான் சிறிது நேரத்தில் பரீட்சை எழுத வேண்டும் என கூறி தன்னை ஆசிரியர் ஒருவர் காப்பாற்றியதாகவும், அதன் பின்னர் பயத்தினால் ஏற்பட்ட மனரீதியான பாதிப்பு காரணமாக சிறந்த முறையில் பரீட்சை எழுத முடியாத நிலை ஏற்பட்டதாகவும் குறித்த மாணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரியின் உறவுக்கார மாணவர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பின்னர் அறிந்துக் கொண்டதாகவும், குறித்த மாணவர் ஏதோ ஒரு சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாகவும், அதற்கு தான் ஒருபோதும் தொடர்புடவில்லை என இந்த மாணவர் கூறியுள்ளார்.
பாடசாலைக்கு அருகில் கண்கானிப்பு கமரா இருந்தால் அதனை பரிசோதித்து உண்மையை புரிந்து கொள்ள முடியும் என பாடசாலை மாணவர் தெரிவித்துள்ளார்.
தான் நேற்று பொலிஸ் நிலையத்திற்கு செல்கின்றமையினால் அச்சத்துடனே இருந்ததாகவும், பயத்துடனே பரீட்சைக்கு முகம் கொடுத்ததாகவும் மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பலர் பார்த்ததற்காக சாட்சிகளை ஆஜர்படுத்த முடியும் எனவும் இராணுவ பிரதானியின் தாக்குலுக்குள்ளான மாணவர் மற்றும் ஏனைய 3 மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி, குறித்த மாணவனுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.