டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்தது விழுந்தது. இதன் காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.பல்வேறு தடைகளால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக பலகை விளையாட்டு மற்றும் சீட்டுக்கட்டுகளை அனுப்ப மீட்புக்குழுவினர் முடிவு செய்தனர்.
இது குறித்து மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருக்கும் மனநல மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ரோகித் கோண்ட்வால் கூறுகையில், “மீட்புப் பணிகள் தாமதமாகி வரும் நிலையில், உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க நாங்கள் அவர்களுக்கு லுடோ, செஸ் மற்றும் சீட்டுக் கட்டுகளை வழங்க முடிவு செய்தோம். பல்வேறு காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருகின்றன. உள்ளே இருப்பவர்களை மீட்க இன்னும் அதிக நேரம் எடுக்கலாம். உள்ள சிக்கியிருக்கும் 41 பேரும் நலமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆரோக்கியமாகவும், நல்ல மனோதிடத்தோடும் இருப்பது அவசியம். உள்ளே இருப்பவர்கள் தங்களின் மன அழுத்தத்தைப் போக்க திருடன் – போலீஸ் விளையாட்டு விளையாடுவதாகவும், யோகா செய்வதாகவும் எங்களிடம் கூறினர்” என்று தெரிவித்தார்.
சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மனநிலை குறித்து பேசிய மற்றொரு மருத்துவ நிபுணர், “உள்ளே சிக்கி இருப்பவர்களின் மனோதிடம் அதிமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அதற்காக, அவர்களுடன் மருத்துவக் குழு ஒன்று தினமும் பேசி, அவர்களின் மனேதிடம் மற்றும் ஆரோக்கியம் பற்றி கேட்டறிகிறது” என்றார்.
சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று தொழிலாளர்களைத் தொட்டு விடும் தூரத்தில் மீட்பு குழுவினர் 46.8 மீட்டர் தூரம் துளையிட்டிருந்த நேரத்தில் ஆஜர் துளையிடும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை இரவு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனிடையே, சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக மினி ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த டிஆர்டிஓ முயற்சி செய்தது. இந்த நிலையில், துளையிடும் பணிகளுக்கு மத்தியில் ஆஜர் இயந்திரம் வியாழக்கிழமை பழுதடைந்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழுது சரிசெய்த பின்னர் பணிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடரும் என்று சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்தார். இதனால், சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி வெள்ளிக்கிழமை 13-ம் நாளை எட்டியுள்ளது. தற்போது இயந்திரத்தின் பழுது சரி செய்யப்பட்டு துளையிடும் பணிகள் தொடங்கி இருக்கிறது.
அதேவேளையில், இடிபாடுகளுக்குள் 800 மிமீ விட்டம் கொண்ட குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதன்வழியாக உள்ளே சிக்கி இருப்பவர்களை வெளியே அழைத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குழாய் வழியாக அவர்களே தவழ்ந்து வருவார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது சக்கரங்கள் பொறுத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர்கள் மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒத்திகையை NDRF வெள்ளிக்கிழமை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.