டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 17 நாட்களா சிக்கிய 41 தொழிலாளர்கள் சில நிமிடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் வெளியே அழைத்துவரப்பட உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கினர்.தொழிலாளர்களை மீட்கும் பணி 17வது நாளாக இன்றும் நடைபெற்றது.
உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன், உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன.41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.நவீன இயந்திரங்கள் கொண்டு சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், எலி துளை சுரங்கம் தோண்டும் முறை பயன்படுத்தப்பட்டது.
குறுகிய விட்டம் கொண்ட சுரங்கங்களைத் தோண்டுவதில் வல்லவர்களான எலிவளை சுரங்கத் தொழிலாளர்களை பயன்படுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான சுரங்கம் தோண்டப்பட்டது.எலிகளைப் போலவே, நெருக்கடி மிக்க சிறிய குகைகளுக்குள் சென்று துளையிடுவதில் அனுபவம் வாய்ந்தவர்களே எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்.80 செ.மீ., அதாவது சுமார் இரண்டரை அடி அகலமுள்ள குழாய் மூலம் உள்ளே சென்று, சுரங்கத்தை மேற்கொண்டு தோண்டினர்.