உலகின் அதிவேக தடகள வீரராக அறியப்படும் உசைன்போல்ட் அகாடமியில் பயிற்சிபெற டெல்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் 16 வயது நிசார் அகமது தேர்வாகி அசத்தியிருக்கிறார்.
டெல்லி ஆஸாத்பூர் பகுதியில் உள்ள பாடா பாக் குடிசைப் பகுதியில் வசித்துவரும் நிசார், தேசிய அளவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டிகளில் சாதனை படைத்தவர். 100 மீ. தூரத்தை 10.85 விநாடிகளில் ஓடிக் கடக்கும் நிசார், 200 மீ. தூரத்தை 22 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடிக் கடந்திருக்கிறார். 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் இதுவே தேசிய அளவில் சாதனையாக இருந்து வருகிறது. டெல்லி குடிசைப் பகுதியில் 10-க்கு 10 அறையில் வசித்து வரும் நிசாரின் தந்தை ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி.
தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட உசைன் போல்ட், தனது சொந்த நாடான ஜமைக்காவில் தடகள வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அகாடமி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அந்த அகாடமியில் உலக அளவில் தடகளப் போட்டிகளில் சாதிக்கத் துடிக்கும் இளம் வீரர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்க இருக்கிறார். அந்தப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ள 15 பேரில், நிசார் அகமதுவும் ஒருவர்.
இதுகுறித்து பேசிய நிசார் அகமது, `பயிற்சிக்காக ஜமைக்கா செல்ல இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பயிற்சியில் கற்றுக்கொண்டதை வைத்து நாட்டுக்காக நிச்சயம் ஒருநாள் பதக்கம் வெல்வேன். ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தும் என் தந்தையின் பெரும்பகுதி வருமானம் எனக்கே செலவாகிறது. விளையாட்டுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து உதவிகோர எண்ணியுள்ளேன். உதவி கிடைத்தால் நிச்சயம் என்னால் சாதிக்க முடியும். காமன்வெல்த் தடகளப் போட்டிகளுக்காகவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் அந்தப் போட்டிகளுக்கும் தேர்வு பெறுவேன்’ என்கிறார் நம்பிக்கையாக.