இவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இதைப்பாருங்கள் வைக்கம் விஜயலக்ஷ்மி ஸ்பெஷல்
வைக்கம் விஜயலக்ஷ்மி பெயரை சொன்னாலே இப்போதிருக்கும் இளவயது சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர்கள் வரை ஒரு குதூகலம். குறுகிய காலத்தில் பெருகிய மதிப்பு பெற்ற வைக்கம் விஜயலக்ஷ்மி அக்டோபர் 7, 1981 இல் கேரளா மாநிலம் வைக்கத்தில் பிறந்தார்.
குறைபாடு ஒரு பொருட்டல்ல. கூடவே நிறைய திறமைகள் இருப்பதை நிரூபிக்கும் இவருக்கு அழகான கண்கள் இருந்தும் அடையாளம் காணும் பார்வை இல்லை. இதற்காக வருந்தாத இவரது பெற்றோர் இசை என்னும் தெய்வீகத்தோடு இவரை இணைக்க வைத்தனர்.
சிறு வயது முதல் இடைவிடாத இசை நாட்டத்தால் வானொலியிலும், ஆடியோ பதிவிலும் இசை கேட்டு, களிப்புற கற்று இன்று இந்த இடத்தை பிடித்திருப்பவர்.
உலக புகழ் பெற்ற பாடகர் யேசுதாஸ் அவர்களை மானசீக குருவாக ஏற்று அவரின் குரல் பதிந்த கேசட்டுகள் மூலம் இசை கற்ற விஜயலக்ஷ்மி இளையராஜாவின் மீது தீவிர பற்று கொண்டிருக்கிறார்.
எப்படியாவது அவர்களை பார்த்து விடவேண்டும் என்று தீராத ஆசையோடு இருந்த இவரை உலகம் திரும்பி பார்க்க வைத்தது அவரது குரல்.
அர்ப்பணிப்பான இசையுணர்வோடு இருக்கும் இவருக்கு ராகங்களில், அதிமுக்கிய மற்றும் மிகவும் சவாலான தோடி மற்றும் பைரவி ராகம் கைவந்த கலையாம். தற்போது 300 க்கும் மேற்பட்ட ராகங்களில் பாடக்கூடிய திறம் பெற்றுள்ளார்.
பூர்விகம் மலையாளம் ஆயினும் தமிழில் நிறைய திரை பாடல்களை பாடியுள்ளார். செல்லுலாயிட் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் குரல் பதிக்க ஆரம்பித்த இவர் தமிழில் குக்கூ படத்தின் மூலம் அறிமுகமானார்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தனியாக கர்னாடக இசை கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். கடந்த பத்து வருடங்களில் 500 மேற்பட்ட இசை அரங்கேற்றங்களை நடத்தியுள்ளார்.
விஜய்யின் தெறி படத்தில் இவர் பாடி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இசை அமைப்பாளர் டி.இமானின் வீரசிவாஜி படத்தில் பாடிய சொப்பன சுந்தரி பாடல் தான் இளைஞர்களின் செல்போனிலும், வானொலிகளில் அதிகம் ஒலிக்கும் பாடல்.
இசையை முறையாக கற்றாலும் இன்னும் கற்க வேண்டும் என்று அவ்வப்போது பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனிடம் தொலைபேசியிலும்,நேரடியாகவும் அடிக்கடி சந்தேகங்கள் கேட்டு தன் இசை அறிவை மெருகேற்றி கொள்வாராம்.
ஏற்கனவே ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மி பற்றி சொன்ன அவர், எப்போதும் இசை மீதே சிந்தனைகளும் எண்ணங்களும் கொண்டிருப்பவர் என்றார்.
கைகள் இருக்கும் போது கவலை எதற்கு என்று துணிவோடு இருக்கும் விஜய லக்ஷ்மி வீணை மீட்டுவதில் வித்தகராம்.
ரசிகர்கள் இவரை அதிகம் விரும்புவது அவரது தமிழ் சொற்கள் உச்சரிப்பை தான். பாடல்களில் அப்படியே வல்லினம் வாள் போன்று கூர்மையாய் தெறிக்கிறது என்று அவர்களே சொல்லியிருக்கிறார்கள். மலையாளம் என்று தெரியாத அளவுக்கு தமிழில் இவரின் வார்த்தை விளையாட்டு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கேரள மற்றும் தமிழக விருதுகளை பெற்றிருக்கும் இவர் விரைவில் தேசிய விருது பெறுவார் என நம்பிக்கை முளைத்துள்ளது.
அவரது பிறந்தநாளான இந்த இனிய நாளில் இசைப்பாடகர் விஜயலக்ஷ்மி இன்னும் நிறைய சாதனைகள் படைக்க சினிஉலகம் வாழ்த்துகிறது.