இலங்கை விவகாரத்தில் ஐ.நா தோற்றுவிட்டதா? ஆணையாளர் அலுவலகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி
இலங்கையில் நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகார நீதியினை வழங்குவதில் ஐ.நா தோற்றுவிட்டாதா? என்ற கேள்வியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்திடம் முன்வைத்துள்ளது.
மனித உரிமைச்சபை ஆணையளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளது.
ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி Thomas HUNEKE, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் மற்றும் ஐ.நா மனித உரிமைச்சபைச் செயலர் முருகையா சுகிந்தனிற்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே, இலங்கைத்தீவில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கைகள் காத்திரமான பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகார நீதியினை பெற்றுக் கொடுப்பதில் தோல்வி கண்டுவிட்டதா என்ற கேள்வியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.
இலங்கைக்கு மேலும் காலநீடிப்பு கொடுப்பதானது, நடந்தேறிய விடயங்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரச தரப்பு தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்திப்பின் போது இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை மேலும் காலநீடிப்பு வழங்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் தமிழ் நாட்டில் உள்ள 250க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் மனுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டிருந்தது.
இலங்கை விவகாரத்தில் ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் கொண்டிருக்கின்ற உறுதியான நிலைபாட்டில் மாற்றம் இல்லை என்றும், தீர்மானங்களை தீர்மானிக்கின்ற உறுப்பு நாடுகளின் கைகளிலேயே விவகாரங்கள் தங்கி இருப்பதாகவும் Thomas HUNEKE தெரிவித்திருந்ததாக ஊடகங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான செயலர் முருகையா சுகிந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் இலங்கை வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தரப்பினர் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினை சந்தித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தரப்பினர் சந்தித்திருப்பது இங்கு குறிப்பிடதக்கது.