இலங்கை செல்லும் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு
400 கோடி செலவில் 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் நடத்தி வரும் ஞானம் அறக்கட்டளை இலங்கையில் 150 வீடுகளை கட்டி இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு வழங்கவுள்ளது.
அந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளி வெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
லைகா நிறுவனம், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகிற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறது. சிங்கள அரசாங்கத்துக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த, எவ்வித நியாயமுமின்றி உறவுகள், உடைமைகள், உரிமைகளையும் இழந்துநிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது. கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். எனவே, நடிகர் ரஜினிகாந்த், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.