இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயவர்த்தனே, சங்கக்கரா உள்ளிட்ட 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் 7 பேர் இறந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை லாகூரில் உள்ள மன்வான் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
இறந்தவர்களில் ஜூபேர், அப்துல் வகாப், அர்ஷத் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்பதும், மற்றொரு பயங்கரவாதி ரகுமான் லாகூரில் 2008-ம் ஆண்டு மார்க்கெட் குண்டுவெடிப்பில் 70 பேரை கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.