இலங்கை அணி படுதோல்வி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா
கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளது.
தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா எல்கர் (129), டி காக் (101) ஆகியோரின் சதத்தால் 392 ஓட்டங்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 110 ஓட்டங்களில் சுருண்டது. பிளாந்தர், ரபாடா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்னர் 282 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 224 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. எல்கர் (55) அரைசதமும், டுபிளசி 41 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் லக்மல் 4 விக்கெட்டும், குமார, ஹெராத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 130 ஓட்டங்களை எடுத்திருந்தது. மேத்யூஸ் (29), சந்திமால் (28) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை 224 ஓட்டங்களில் சுருண்டது.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,
அதிகபட்சமாக அணித்தலைவர் மேத்யூஸ் 49 ஓட்டங்களையும், ஹெராத் 35 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில், ரபாடா 6 விக்கெட்டுகளையும், பிளாந்தர் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.