இலங்கையிலே உயரத்தில் மிகவும் கூடிய மனிதராகக் கருதப்படுபவர் ஒரு முன்னாள் போராளியாவார்.
குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும். இவர் 2009 மே 17ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சாவகச்சேரியை சேர்ந்த 33 வயதான கஜேந்திரன், ஒரு குழந்தைக்கு தந்தையுமாவார்.
இவர் தனது உயரத்தினால் ஏனையோரைப் போல பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை எனவும் வீடுகளில் உள்ள கதவுகள் வழியாகக் கடந்து செல்ல முடியாது குனிந்து செல்ல வேண்டியுள்ளது என்பதால் தான் பல சிரமங்களை எதிர் நோக்கவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.உடல்நல ரீதியாகவும் இந்த உயரத்தினால் சிரமப்பட வேண்டியுள்ளது எனக் கூறிய கஜேந்திரன் அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ, அமர்ந்திருக்கவோ முடியவில்லை. வெளியே செல்லும் போது மற்றவர்கள் நிமிர்ந்து பார்ப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறினார்.
எனினும் , இந்த உயரம் தனக்கு சிலவேளைகளில் உதவியாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு உயரமான பொருளை வைக்காமலேயே மின்குமிழ்களை மாற்ற முடிவதாகக் கூறுகிறார்.