இலங்கையில் காணப்படும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து தரவுகளை சேகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இலங்கையின் சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் அட்ஹெனோம் கேப்ரியேசிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இலங்கையின் அத்தியாவசிய அவசர மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எட்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையின் உணவுப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மனிதாபிமான ரீதியிலான கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.
குறித்த நிதித் தொகையைப் பெற்றுக் கொள்ளும்பட்சத்தில் மாத்திரமே இன்னும் 3 – 4 மாத காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான வேண்டுகோளைக் கருத்திற் கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் அட்ஹெனோம் கேப்ரியேசிஸ் தெரிவித்துள்ளார்.