இலங்கைக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (07) இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.
ஜொஷ் ஹேஸ்ல்வூட், மிச்செல் ஸ்டார்க் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் டேவிட் வோர்னர், அணித் தலைவர் ஆரோன் பின்ச் ஆகியோரின் கவனமும் வேகமும் கலந்த அரைச் சதங்களும் அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின.
அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை அண்மித்துக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் அரங்கை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.
அவுஸ்திரேலியா 12 ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரவு 10.05 மணியளவில் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
முழு அரங்கும் விரிப்புகளால் மறைக்கப்பட்டதுடன் மழைவிட்டதும் இரவு 10.55 மணிக்கு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.
வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய 28 ஓட்டங்களை 14 பந்துகளில் அவுஸ்திரேலியா பெற்றது.
டேவிட் வோர்னர் 44 பந்துகளில் 9 பவுண்டறிகள் அடங்கலாக 70 ஓட்டங்களுடனும் ஆரொன் பின்ச் 40 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 61 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இலங்கைக்கு எதிராக கடந்த 5 போட்டிகளில் வோர்னர் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்ததன் மூலம் அரிய மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார். 2019ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான 3 தொடர்ச்சியான போட்டிகளில் 100 ஓட்டங்களையும் 60 ஓட்டங்களையும் 57 ஓட்டங்களையும் பெற்றதுடன் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் ஆட்டமிழக்காதிருந்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வோர்னர் 85 ஓட்டங்களைக் குவித்தார்.
இப்போது ஆர்.பிரேமதாச அரங்கில் 70 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
சிறப்பாக ஆரம்பித்து மோசாக முடித்த இலங்கை
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை தனது துடுப்பாட்டத்தை மிகச் சிறப்பாக ஆரம்பித்த போதிலும் 12ஆவது ஓவரிலிருந்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க, தனுஷ்க குணதிலக்க ஆகிய இருவரும் சுமாரான வேகத்தில் ஓட்டங்களைப் பெற்று முதல் விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஜொஷ் ஹேஸ்ல்வூட் வீசிய பந்தை விசுக்கி அடித்த தனுஷ்க குனதிலக்க 26 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பெத்தும் நிஸ்ஸன்கவும் சரித் அசலன்கவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து கொடுக்க இலங்கை 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை சரிவு 28 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்கள்
12ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பெத்தும் நிஸ்ஸன்கவின் விக்கெட்டை மிச்செல் ஸ்டார்க் நேரடியாக பதம் பார்க்க இலங்கையின் சரிவு ஆரம்பித்தது.
பெத்தும் நிஸ்ஸன்க 36 ஓட்டங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை 9 விக்கெட்களை இழக்க அதன் இன்னிங்ஸ் 128 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர்களைப் போன்று இலங்கை அணியிலும் 8ஆம் இலக்கம்வரை சிக்ஸ்கள் விளாசக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதாக அணித் தலைவர் தசுன் ஷானக்க கூறியிருந்தபோதிலும் அது சாத்தியப்படவில்லை. இலங்கை இன்னிங்ஸில் 3 சிக்ஸ்கள் மாத்திரமே பெறப்பட்டது.
14ஆவது ஓவரில் ஜொஷ் ஹேஸ்ல்வூடின் பந்துவீச்சில் குசல் மெண்டிஸ் (1), பானுக்க ராஜபக்ஷ (0), தசுன் ஷானக்க (0) ஆகிய மூவரும் ஆட்டமிழ்ந்தது இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இந்த 3 விக்கெட்களும் 3 ஓட்டங்களில் வீழ்ந்தன.
மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சரித் அசலன்க அழுத்தம் காரணமாக 38 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.
மத்திய வரிசையில் வனிந்து ஹசரங்க மாத்திரம் ஓரளவு தாக்குப் பிடித்து 17 ஓட்டங்களைப் பெற்றார்.
சாமிக்க கருணாரட்ன (1), துஷ்மன்த சமீர (1), மஹீஷ் தீக்ஷன (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்களைத் தாரைவார்த்து வெளியேறினர். நுவன் துஷார ஓட்டம் பெறாமல் ஆட்டமிழக்காதிருந்தார்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய மிச்செல் ஸ்டார்க் தனது 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை (08) நடைபெறவுள்ளது.
மைதானத்திலும் மைதானத்தை சுற்றியும் கடும் பாதுகாப்பு
நாட்டில் பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் நடைபெறும் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடரை முன்னிட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு ஆர். பிரேமதாச விளையாட்டரங்குக்கு வெளியேயும் உள்ளேயும் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், முப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் ஆங்காங்கே நீர்த்தாரை பீச்சும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அரங்குக்கு வெளியில் வீதிகளின் 4 இடங்களில் அரங்குக்கு வருகை தந்த இரசிகர்கள் பொலிஸாரால் சொதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே அரங்குக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.