இலங்கைக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் அவுஸ்திரேலியா இப்போதைக்கு தனதாக்கிக்கொண்டது.
125 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சிறு தடுமாற்றத்துக்கு மத்தியில் 17.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கேன் றிச்சர்ட்சன், ஜய் றிச்சர்ட்சன், க்ளென் மெக்ஸ்வெல் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் மெத்யூ வேடின் நிதானமான துடுப்பாட்டமும் அவுஸ்திரேலியாவை வெற்றி அடையச் செய்தன.
அதிவேமாக ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்த அவுஸ்திரேலியா 16 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது வனிந்து ஹசரங்க டி சில்வாவின் பந்துவீச்சில் தனுஷ்க குணதிலக்கவிடம் பிடிகொடுத்த ஆரோன் பின்ச் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 20 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஹசரங்கவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் மிச்செல் மார்ஷ் (11) நடையைக் கட்டினார்.
அவரைத் தொடர்ந்து நுவன் துஷாரவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஸ்டீவ் ஸ்மித் (9) களம் விட்டகன்றார்.
திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த டேவிட் வோர்னர் அவசரமாக 2ஆவது ஓட்டம் ஒன்றை எடுக்க விளைந்து 21 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
9ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 80 ஓட்டங்களாக இருந்தபோது துஷ்மன்த சமீரவின் பந்தை கவனக்குறைவாக அடித்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (9) சரித் அசலன்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இந் நிலையில் போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற ஒரு நிலை காணப்பட்டதுடன் இலங்கை அணியினரும் இரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். அரங்கில் இரசிகர்களின் ஆரவாரங்களும் கரகோஷங்களும் ஓங்கி ஒலித்தன.
மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது 12ஆவது ஓவரில் க்ளென் மெக்ஸ்வெல் (19), ஏஷ்டன் அகார் (0) ஆசிய இருவரும் வனிந்து ஹசரங்கவின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
ஆனால், மெத்யூ வேட் (26 ஆ.இ.), ஜய் றிச்சர்ட்சன் (9 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 27 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியையும் தொடர் வெற்றியையும் உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு மாற்றத்துடன் களம் இறங்க இலங்கை அதே பதினொருவருடன் விளையாடியது.
முதலாவது போட்டியின் முதல் ஓவரிலேயே கைவிரலில் காயத்துக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்டார்க்குக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜய் றிச்சர்ட்சன் அணியின் இணைக்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற முதலாவது போட்டியில் போன்று முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.
முதலாவது போட்டியில் கடைசி 46 பந்துகளில் சரிந்த இலங்கை இந்தப் போட்டியில் அதற்கு எதிர்மாறாக ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
சுழல்பந்துவீச்சாளர் க்ளென் மெக்ஸ்வெலை ஆரம்பப் பந்துவீச்சாளராக பயன்படுத்திய அணித் தலைவர் ஆரோன் பின்ச் அதற்கான பலனை 5ஆவது பந்தில் பெற்றார்.
மெக்ஸ்வெலின் பந்தை இடப்புறமாக சுழற்றி அடிக்க முயற்சித்த தனுஷ்க குணதலக்க (04) மிச்செல் மார்ஷிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். (5 – 1 விக்.)
இதனைத் தொடர்ந்து தடுமாற்றத்துக்கு மத்தியில் ஆமைவேகத்தில் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்த இலங்கை 3ஆவது ஓவரில் பெத்தும் நிஸ்ஸன்கவின் (3) விக்கெட்டை இழந்தது. ஜய்ல் றிச்சர்ட்சனின் பந்துவீச்சில் அவரும் மிச்செல் மார்ஷிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். (7 – 2 விக்.)
இந் நிலையில் சரித் அசலன்கவும் குசல் மெண்டிஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால், 12ஆவது ஓவரில் மெக்ஸ்வெலின் பந்துவீச்சில் பின்சிடம் பிடிகொடுத்த அசலன்க 39 ஓட்டங்களுடன் வேளியேறினார்.
2 ஓவர்கள் கழித்து ஜய் றிச்சர்ட்சனின் பந்தை சுழற்றி அடிக்க முயற்சித்த குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பானுக்க ராஜபக்ஷ (13), அணித் தலைவர் தசுன் ஷானக்க (14) ஆகிய இருவரும் கேன் றிச்சர்ட்சனின் பந்துவீச்சிலும் வனிந்து ஹசரங்க டி சில்வா (12) ஜய் றிச்சர்ட்சனின் பந்துவீச்சிலும் தவறான அடி தெரிவுகளால் பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்வரிசையில் சாமிக்க கருணாரட்ன (0), துஷ்மன்த சமீர (0) ஆகிய இருவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து சென்றனர்.
மஹீஷ் தீக்ஷன ஒரு ஓட்டத்துடனும் நுவன் துஷார 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் கேன் றிச்சர்ட்சன் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜய் றிச்சர்ட்சன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் இருவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதிகளாக அவை அமைந்தன.
அவர்களைவிட க்ளென் மெக்ஸ்வெல் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.