இந்த அரசு இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சிதான் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சி உருவானது.
மஹிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வாக இருக்கும் என்று இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. எதுவும் நடக்கவில்லை. இருக்கின்ற நிலைமை மேலும் மோசமாகின்றதே தவிர நல்ல விடயங்கள் எதுவும் நடக்கவில்லை.
வாழ்க்கைச் செலவீனம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
வெளிநாட்டு முதலீடுகள் எவையும் நாட்டுக்குள் வரவில்லை. பிரதமரும் ஜனாதிபதியும் எல்லா நாடுகளுக்கும் சென்று வருகின்றனர்.
ஆனால், ஒரு முதலீட்டாளர் கூட நாட்டுக்குள் நுழையவில்லை. சர்வதேச நாடுகள் நட்பாக உள்ளதாக இந்த அரசு கூறிக்கொள்கின்றது.
ஆனால், அந்த நாடுகள் எவையும் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு உதவுவதாக இல்லை.
மறுபுறம், போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் இலங்கைக்கு உதவுவதற்கு இந்த விவகாரத்தை அந்த நாடுகள் பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மொத்தத்தில் எல்லா விடயங்களும் சிக்கலாகவே இருக்கின்றன. இந்த அரசு ஆட்சியைக் கைப்பற்றி இரண்டரை வருடங்கள் ஆகின்றன.
கடந்து சென்றதைப் போன்று அரைவாசிக் காலம்தான் தேர்தலுக்கு இருக்கின்றது. இப்படியே எதுவித சாதகமான மாற்றமும் இன்றி நாடு சென்றால் நாட்டில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும் எனவும் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர குறிப்பிட்டுள்ளார்.