கிட்டத்தட்ட நாற்பது நொடிகள் அந்தக் கைதட்டல் தொடர்கிறது. அரங்கமே எழுந்து நின்று கரகொலி எழுப்புகிறது. சமீபத்தில் நடந்த ‘கோல்டன் க்ளோப்’ விருது நிகழ்வில் நடைபெற்ற காட்சிதான் இது. விருதினை வாங்கியவர் ஒரு பெண். கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்.
கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் அந்த விருதை வாங்குவது இதுவே முதல் முறை. கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், சிறந்த நடிப்புக்கான கோல்டன் க்ளோப் விருதினை 1964-ம் ஆண்டுதான் முதன்முதலில் வாங்கினார். தற்போது, ஹாலிவுட்டில் நீண்ட நாள் பங்களிப்புக்காக Hollywood Foreign Press Association மூலம் தரப்படும் Cecil B. DeMille விருதினை வாங்கும் முதல் கறுப்பினப் பெண்ணாகியிருக்கிறார் ஓப்ரா வின்ஃப்ரே. விருதினை வாங்கிவிட்டு எட்டு நிமிடங்கள் ஓப்ரா பேசியது ‘ப்ரெசிடென்ஷியல் ஸ்பீச்’ என்று எழுதும் அளவுக்கு இன்ஸ்பைரிங் ரகம். அதன் சுருக்கமான வடிவம் இதோ.
“1964-ம் ஆண்டு ஒரு சிறிய பெண்ணாக வீட்டின் தரையில் அமர்ந்து, ஆஸ்கர் விருது விழாவினை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு உச்சரிக்கப்பட்ட ஐந்து வார்த்தைகள் வரலாற்றை உருவாக்கின. விருதினைப் பெற்றவர், சிட்னி பார்டியர் (the winner is Sydney Poitier). அதுவரை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்திடாத ஒரு நேர்த்தியான மனிதர், ஒரு கறுப்பின மனிதர், வெள்ளை உடையுடன் மேடையேறினார். அதுவரை ஒரு கறுப்பின மனிதர் அப்படிப் பாராட்டப்படுவதை, கொண்டாடப்படுவதை நான் பார்த்ததே இல்லை. சிட்னி நடித்த லில்லிஸ் ஆஃப் த ஃபீல்டு (lilies of the field) படத்தில் அவர் சொல்லும், ‘ஆமேன், ஆமேன்’ என்று உணர்வுதான் அப்போது எனக்கும் இருந்தது. 1982-ம் ஆண்டு நான் வாங்கும் இதே விருதை சிட்னி வாங்கினார். தற்போது, முதல் கறுப்பினப் பெண்ணாக நான் இந்த விருதை வாங்குவதை நிறையக் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிறப்பான நிமிடங்களை அவர்களுடனும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. நான் இந்த நிலைக்கு வருவதற்கு உதவிய ஆண்கள், பெண்கள் என்று அனைவருக்கும் நன்றி. Hollywood Foreign Press Association-க்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒடுக்குமுறையை இதழியல் சந்தித்துக்கொண்டிருக்கிறது. முக்கியமான பிரச்னைகளை நம் அறிவதைத் உறுதிபடுத்த, அவர்கள் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊடகத்தை மதிக்கிறேன். உண்மையைப் பேசுவதுதான் உலகிலேயே மிகவும் வலிமையான ஆயுதம். அப்படி உண்மையை, தாங்கள் அனுபவித்த கொடுமைகளை மிகுந்த தைரியத்தோடு பேசிய பெண்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு வருடமும் நாம் சொல்லும் கதைகளுக்காக நாம் கொண்டாடப்பட்டோம். ஆனால், இந்த வருடம் நாமே அந்தக் கதைகளானோம். [MeToo] இது வெறுமனே என்டெர்டெயின்மென்ட் துறையை மட்டுமே இலக்காகக் கொண்டது அல்லது. இனம், புவியியல் அமைப்பு, கலாசாரம், மதம், அரசியல் என்று அனைத்தையும் கடந்தது. இந்த இரவில், என் அம்மாவைப்போல, குழந்தைகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக, அவர்களுடைய கனவுகளுக்காகத் தனக்கு நடந்த சித்திரவதைகளை பொறுத்துக்கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய பெயர்களை நாம் ஒருபோதும் அறியமாட்டோம்.
1944-ம் ஆண்டு, ரிசி டைலர் என்கிற பெண் சர்ச்சிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது ஆயுதங்கள் தங்கிய வெள்ளை இன ஆண்களால் மிகமோசமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். ‘இதை வெளியே சொன்னால் கொல்லப்படுவாய்’ என்று மிரட்டப்பட்டார். ஆனால், ரோசா பார்க்கர்ஸ் என்கிற பெண் பத்திரிகையாளர் இதனை வெளியேகொண்டு வந்தார். நீதிக்காகப் போராடினார்கள். ஆனால், அந்த ஆண்களுக்குப் பின்னால் இருந்த அதிகாரம், நீதியை மறைத்தது. ரிசி டைலர் பத்து நாள்களுக்கு முன்னால் தன்னுடைய 98 ஆவது வயதில் இறந்து போயிருக்கிறார். பல வருடங்களாகப் பெண்கள் அதுபோன்ற அதிகாரம் படைத்த ஆண்களுக்கு எதிராகப் பேசினால், நம்பப்படாமல், அங்கீகிரிக்கப்படாமல் இருந்தார்கள். அந்தக் காலம் முடிந்துவிட்டது. ரிசி டைலர் ஓர் உண்மையை அறிந்தே மறைந்துபோனார். அவரைப்போலவே, துன்புறுத்தப்படும் பல்லாயிரம் பெண்கள் இப்போதும் அணிவகுத்துச் செல்கிறார்கள்.
அது ரோசா பார்க்கிடமும், ‘மீ டூ’ என்று சொன்ன ஒவ்வொருவரிடமும், அதைக் காது கொடுத்துக் கேட்கும் ஒவ்வோர் ஆணிடமும் இருக்கிறது. நான் என்னுடைய ஒவ்வொரு டிவி மற்றும் படங்களின் வழியாக ஏதோ ஒன்றை வெளிப்படுத்த விரும்பியிருக்கிறேன். ஓர் ஆணும் பெண்ணும் எப்படி நடந்துகொள்வார்கள், நாம் எப்படி அவமானப்படுத்தப்படுவோம், நாம் எப்படிக் காதலிப்போம், கோபப்படுவோம், தோற்போம், அதிலிருந்து மீண்டுவருவோம் என்பதை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். நீங்கள் யாரும் கேள்விப்பட்டிராத கொடூரங்களை அனுபவித்திருக்கும் பெண்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுவான விஷயத்தைக் கண்டுள்ளேன். எவ்வளவோ காரிருள் சூழ்ந்த இரவுகளில் இருந்தாலும், விடியலை நோக்கிய அவர்களின் நம்பிக்கைதான் அது. இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்ல விரும்புவது…. புதிய நாள் ஒன்று அடிவானத்தில் உதித்திருக்கிறது. இனி யாருமே ‘MeToo’ என்று சொல்லாதபடி பிறக்கவிருக்கும் அந்தப் புதிய நாளுக்கான காரணம் இன்று இங்கு அமர்ந்திருக்கும் அற்புதமான பெண்களும், சிறப்பான ஆண்களும்தாம்”
என்று ஓப்ரா வின்ஃப்ரே முத்தபோது, கண்களில் பெருகிய கண்ணீரோடு மீண்டும் எழுந்து நின்று தன் ஆதரவை அளித்தது மொத்த அரங்கமும்.