17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அணிகளில் GROUP – C, GROUP – D பிரிவுகளில் இடம்பெற்றுள்ள அணிகளைப் பற்றி ஒரு பார்வை…
GROUP – C
ஜெர்மனி
ஃபிஃபா உலகக்கோப்பை, கான்ஃபெடரேஷன் கோப்பை, அண்டர்-21 உலகக்கோப்பை அனைத்திலும் நடப்பு சாம்பியனாக வலம்வரும் ஜெர்மனி அணி, இதுவரை வென்றிடாத அண்டர்-17 போட்டியிலும் வெல்ல முனைப்புடன் வந்துள்ளது. ஜெர்மனியின் பயிற்சியாளரான கிறிஸ்டியன் வுக், அவரது காலத்தில் ஜெர்மனி அண்டர் 21 அணியில் பலமுறை விளையாடியவர். ‘ஜெர்மனி அண்டர் 16 அணி’க்கும் பயிற்சியாளராக இருந்தவர். ஒரு வீரராக இருந்ததைவிட பயிற்சியாளர் பதவியில் பெயரெடுத்தவர். ஜெர்மனி அண்டர் 17 அணிக்காக இரண்டு முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஜேன் ஃபியத் அர்ப், துடிப்பான டிஃபெண்டரான ஃப்ளோரியன் பாக் ஆகியோர் ஜெர்மனியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
கோஸ்டா ரிகா
முன்னாள் அர்ஜென்டினா மிட்ஃபீல்ட்ரான மார்செலோ ஹெரேராவிடமிருந்த கோஸ்டா ரிகா அணியின் பயிற்சியாளர் பதவியைப் பறித்துள்ளார் பிரியென்ஸே கமாக்கோ. ஸ்ட்ரைக்கர்களான ரொடால்ஃபோ அல்ஃபாரோ மற்றும் ஆண்ட்ரஸ் கோமெஸ் மற்றும் ஜூலென் கார்டெரோ ஆகியோர்தான் கோஸ்டா ரிகா அணியின் கீ பிளேயர்கள். இதுவரை ஒன்பது முறை அண்டர் 17 உலகக்கோப்பையில் கலந்துகொண்டுள்ள கோஸ்டா ரிகா அணி, நான்கு முறை கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
கினியா:
1985-ம் ஆண்டு முதல் அண்டர் 17 போட்டிகளில் பங்கெடுத்துவருகிறது கினியா. அந்த நாட்டைச் சேர்ந்த முன்னாள் பிளேமேக்கர் சொலைமான் கமாராதான் பயிற்சியாளர். கினியாவின் கீ பிளேயர் ட்ஜிப்ரில் ஃபஞ்சே டூர். இவர் `ஆப்பிரிகன் கப் ஆஃப் நேஷன்ஸ்’ தொடரில் ஆறு கோல்கள் அடித்து, தங்க ஷூ விருதைத் தட்டிச்சென்றவர். இதுவரை நான்கு முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் கலந்துகொண்ட கினியா அணி, ஒரு முறை நான்காவது இடத்தைப் பெற்றது.
ஈரான்
ஏற்கெனவே `ஈரான் அண்டர் 20′ அணிக்குப் பயிற்சியாளராக இருந்த அப்பாஸ் ஷமான்யனின் வழிநடத்தலில் களமிறங்குகிறது ஈரான். மிட்ஃபீல்டரான முகம்மது ஷரிஃபி, அணிக்குத் தலைமை. இதுவரை மூன்று முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் கலந்துகொண்ட ஈரான் அணி, இரண்டாவது சுற்றைத் தாண்டியதில்லை. ஆனால், அண்டர் 16 ஆசியக்கோப்பையில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
GROUP – D
பிரேசில்
20 வருடங்கள் பயிற்சியாளர் அனுபவம்கொண்ட பாஹியன் கார்லோஸ்தான் பிரேசிலின் பயிற்சியாளர். டிஃபெண்டரான லூகஸ் ஒலிவெய்ரா, மிட் ஃபீல்டரான கஸ்டவோ ஹென்ரிக்கே மற்றும் ஸ்டிரைக்கரான லின்கொல்ன் ஆகியோர் பிரேசிலின் `ட்ரிப்பிள் த்ரெட்’. அதிரடி ஸ்ட்ரைக்கர் ரியல் மாட்ரிட்டால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வினிஷியஸ் ஜூனியர் தொடரிலிருந்து விலகியது பேரிழப்புதான் என்றாலும், அதைச் சரிகட்டும் அளவுக்குத் திறமையானது பிரேசில் அணி. இதுவரை 15 முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் கலந்துகொண்டுள்ள பிரேசில் அணி, மூன்று முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்பெயின்
அண்டர் 17 உலகக்கோப்பையில் மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பெற்று ஏமாற்றமடைந்த ஸ்பெயின் அணி, இந்தமுறை எப்படியேனும் கோப்பையை வென்றுவிட வேண்டுமென்ற நோக்கில் தீவிரமாகப் பயிற்சி செய்துவருகிறது. ஸ்பெயினின் ஓய்வுபெற்ற டிஃபெண்டரான சாண்டியாகோ டெனியா பயிற்சியாளர். இவரின் பயிற்சியின்கீழ்தான் ஸ்பெயின் அண்டர் 17 அணி டிக்கி-டாக்கா உத்தியில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது. ஸ்பெயின் அண்டர் 17 அணிக்காக 19 கோல்கள் அடித்துள்ள, பார்சிலோனா யூத் அகாடமியின் வளர்ப்பான அபெல் ரூயிஸ் இந்தத் தொடரில் ரவுண்டுகட்டி அடிக்கலாம்.
நைஜெர்
நைஜெர் அணி, இப்போதுதான் முதல்முறையாக அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கிறது. ‘ஆப்பிரிக்கன் கப் ஆஃப் நேஷன்ஸ்’ தொடரில் நான்காவது இடம் பிடித்ததன் மூலம் இந்த வாய்ப்பை, இசமைலா டியெமகோ பயிற்சளித்துவரும் நைஜெர் அணி பெற்றுள்ளது. ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளிடம் பெரிய அடி வாங்கக்கூடும்.
வட கொரியா
அனுபவமிக்க முன்னாள் கொரிய கால்பந்து வீரர் யுன் ஜோங் சூ பயிற்சியின் கீழ் பங்கேற்கும் வட கொரிய அணிக்கு, கிம் போம் ஹ்யோக்தான் கேப்டன். அட்டாக்கிங் மிட்ஃபீல்டரும் கேப்டனுமான கிம் போக் ஹ்யோக் மற்றும் தகுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த கைய் டாம் ஆகியோர் வட கொரியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். நான்கு முறை அண்டர் 17 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள வட கொரியா அணி, ஒரு முறை மட்டுமே கால் இறுதியை எட்டியுள்ளது. இந்த அணி இரண்டு முறை ஆசியக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.