இலங்கை மண்ணின் சமகால நிலைமையை பிரதிபலிக்கும் படைப்பாக தற்போது புது வீச்சோடு சமூக ஊடகங்களில் வலம் வந்துள்ளது, ‘கரகாட்டக்காரன் 2.0’ பாடல் காணொளி. கரகாட்டம், Rap இசை, துள்ளலும் துடிப்புமான ஆடல், நையாண்டியும் சேர்ந்த கிராமிய மெட்டு, நையாண்டித்தனமான வரிகள் என பலரது ரசனையை வென்ற இப்பாடலுக்குள் பேசப்படும் அரசியல் மற்றும் கலையம்சங்கள் குறித்து பாடல் குழுவினருடன் உரையாடினோம்.
‘கரகாட்டக்காரன் 2.0’ பாடலுக்கான வரிகள்…. அப்படியொரு கற்பனை… உங்களுக்குள் எழுந்தது எப்படி?
‘புட்டு’ பாடல், ‘இராவணன் காதலி’ அந்த வரிசையில் அடுத்து, நாங்கள் ‘கரகாட்டக்காரன்’ பாடலை வெளியிட்டோம். தனியாக அரசியல் பேசாமல், பாடலின் முதல் பகுதியில் மட்டக்களப்பில் உள்ள ஊர்களின் பெயர்கள் வாயிலாக ஒரு பெண்ணை வர்ணிப்பது போல் இருந்தது. அடுத்தடுத்த பகுதிகள் இலங்கையின் பொருளாதார நிலைமை பற்றியும் அரசியல்வாதிகளின் போக்கை பற்றியும் பேசுவதாக உள்ளது.
ஊர் முழுக்க அடுப்புக்குள்ள பூனை தூங்குது
கௌரவர்கள் போக இங்கே யானை கேக்குது
***
எல்லை தாண்டி வலையறுக்குற இந்திய ரோலர்
உப்புடியே போனா இதுக்கு முடிவென்ன தோழர் முதலான வரிகளில் இரட்டை அர்த்தங்களே அதிகம். காதலும் அரசியலும் இணைந்த நையாண்டி, தீவிரத்தன்மை கொண்டு எழுதப்பட்ட பாடலிது.
அதென்ன ‘கரகாட்டக்காரன் 2.0’…?
ஊரில் ஒரு பழமொழியுண்டு. கரகத்தை தூக்கியவர் அந்த கரகத்தை அவரே ஆடி இறக்கி வைக்க வேண்டும் என்று. கடந்த காலங்களில் அரசு நாற்காலிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் ஆட்சி ‘கரகாட்டக்காரன் 1’ என்றால், இது ‘கரகாட்டக்காரன் 2.0’. இந்த கரகம் எப்போது இறக்கப்படும் என்று தெரியாது.
பாடலின் நடுவில் “எப்படிடா என்ன பாத்து இந்த கேள்விய கேட்கலாம்” என்று சொல்வது நீங்கள்தானே… என்ன சொல்கிறது, சமூக நிலவரம்?
உங்களுக்குத் தெரியும்… ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணியின் காதில் செந்தில் கேட்பார், “சொப்பனசுந்தரி வச்சிருந்த காரை இப்ப நாங்க வச்சிருக்கோம்…. இந்த காரை வச்சிருந்த சொப்பனசுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கிறது…” என்று. அந்த வசனத்தை தான் இதில் புகுத்தினேன்.
பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி இது. “தம்பி, சீனா ஒருபக்கம், அமெரிக்கா இன்னொரு பக்கம், இந்தியா வேறொரு பக்கம் என நாட்டை ஆக்கிரமித்துள்ளது…. உண்மையில் நாட்டை தன்வசம் வைத்திருப்பது யார்” என்று என்னை கேட்டால், நான் என்ன சொல்வது? எனக்குமே தெரியாத ஒன்றை எப்படி விபரிப்பது? எனது அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தவே பாடலின் நடுவே “ஏன்டா என்ன பாத்து அந்த கேள்விய கேட்ட?” என்றேன்.
பாடல் காட்சியில் மாற்றுநிற சிலிண்டர், சிவப்புத்துண்டு போன்ற சில நுட்பங்களை கையாண்டிருக்கிறீர்கள்… அதைப் பற்றி…
பாடலில் அவர் தோளில் இருப்பது சிவப்பு ஷேர்ட். அது ஒரு வெளிப்படையான குறியீடு தான். ஷூட்டிங் இடம்பெற்ற சந்தைத் தொகுதியில் நடித்தவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதாலும், சர்ச்சைகளை தவிர்ப்பதற்கும் நுட்பமாக செயற்பட்டோம். ஏனென்றால், எங்களோடு பணியாற்றும் கலைஞர்களை பாதுகாப்பதே எனக்கு முக்கியம்.
அடுத்து மாற்று நிற சிலிண்டர் – விடயத்தை சரியாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அதேவேளை சட்ட ரீதியான பிரச்சினைகளை தவிர்க்க பாடல்களையும் வரிகளையும் மிக சாதுரியமாக கையாள வேண்டியிருந்தது.
இந்த காணொளிக்கான ஆலோசனைகளை வழங்கியபோதும், ஷூட்டிங் ஸ்பொட்டுக்கு நான் செல்லவில்லை. இந்த பாடலை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.
பாடலுக்கான இசை பற்றிய உங்கள் பார்வை…
இதுவரை யாழ்ப்பாணத்தில் வெளியான பாடல்களிலேயே இந்த காணொளிக்கான ஓடியோவை மிகத் தரமானதாக அமைத்திருக்கிறோம். பாடலுக்கான இசையை பொறுத்தவரையில், இதில் கையாளப்பட்டுள்ளவை எல்லாம் நிஜ கிராமிய இசைக்கருவிகளே. ஒரிஜினல் தோல் வாத்தியங்களை கொண்டு இங்கே பாடல் பதிவு செய்வதில் சிரமங்கள் இருந்ததால், இந்திய கலைஞர்களே நம் நாட்டுக்கு வந்து, பாடல் பதிவினை மேற்கொண்டிருந்தனர்.
‘கரகாட்டக்காரன் 2.0’ பாடலுக்கான வரவேற்பு எவ்வாறு உள்ளது? ஏதும் விமர்சனங்கள்?
வரவேற்கின்றனர்… நல்ல கருத்துக்களையே பகிர்கின்றனர். யாரும் எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஆனால், நாட்டில் சமூக ஊடகங்கள் சரிவர இயங்காத காரணத்தால் இன்னும் இதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கிராமிய இசையில் Rap பாடிய அனுபவம்?
எனக்கு இது புதிய அனுபவம் இல்லை. முன்னரும் கிராமிய இசையில் நிறைய Rap பாடியிருக்கிறேன். எனினும், இந்தப் பாடலை பாடுவதற்காக உமாகரன் அண்ணா புதியதொரு பாணியை சொல்லிக்கொடுத்திருந்தார்.
பாடல் வரிகளை நீங்கள் அண்ணாவிடம் கேட்டு பெற்றபோது ஏற்பட்ட சுவாரஸ்யங்கள்?
சில விடயங்களை கிண்டல் செய்கிற வகையில் பாடலை எதிர்பார்த்தேன். ஆனால், அண்ணா வேறொரு கோணத்தில் கிண்டலும் சீரியஸும் கலந்த விதமாக பாடலை எழுதியிருந்தார்.
சொப்பனசுந்தரி வசனம்… அதுபோல “இரு பனை மரத்திடை வெளி நிலவென அவள் முகம் வரும்” – பெண்ணை வர்ணிக்கும் இதுபோன்ற வரிகள் வித்தியாசமாக இருந்தன. நானும் எழுத்தாளன் தான். எனக்கும் சில வரிகளில் எதிர்பார்ப்புகள் இருக்கும். இதனூடாக பல விடயங்களை கற்றும் வருகிறேன்.
“மருதமல்லி…” பாடலுக்கு நடனமாடியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முதலில் MP3யாக பாடலை கேட்டதும் விறுவிறுப்பான அதன் இசை, மெட்டு என்னை ஈர்த்தது. கொஞ்சம் funஆக, அதேவேளை உட்கருத்து மிக்க வரிகளுக்கேற்ப ஸ்டெப்ஸ் போட நினைத்தேன். அதுபோலவே பாடல் மிக அருமையாக வந்திருக்கிறது.
பலரின் கவனத்தை ஈர்ப்பது போல் நடனம் அமைத்திருக்கிறீர்கள்…. இந்த ஸ்டெப்ஸ் எல்லாம் யாருடைய தாக்கத்தால் வந்தது உங்களுக்கு?
சினிமா பார்த்ததால் வந்த தாக்கமாகவும் இருக்கலாம். அத்தோடு நாங்கள் பங்கேற்கும் மேடை நாடகங்கள், கூத்துக்கள், சமூகம் மற்றும் இசை நாடகங்களிலேயே கூத்து நாடகங்களில் நிறைய ஆட்ட வகைகள் உள்ளன. காத்தவராயன் கூத்து, வடமோடி, தென்மோடி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆட்டங்கள் உண்டு. இத்தகைய பாரம்பரிய நடனங்களில் உள்ள சிறு சிறு அம்சங்களை பாடலில் சேர்த்துள்ளேன்.
கரகம் தொடங்கி டப்பாங்குத்து வரையான ஆட்ட வகைகளை புகுத்தியது ஏன்?
டைட்டிலுக்கு பொருந்த வேண்டும். அத்தோடு கரகாட்டத்துக்கு உரிய தவில், நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் கையாளப்பட்டிருந்தது. இரண்டு ஆண்களது சந்திப்பின்போது ஒரு பெண்ணை பற்றி பேசுவது, பிறகு அவர்கள் நாட்டுப் பிரச்சினை பற்றி பேசுவது மாதிரியான காட்சிகள் மாறி மாறி வருவதால் கரகாட்டம், டப்பாங்குத்து என மாறி மாறி ஆடியிருக்கிறோம்.
உங்களோடு ஆடிய அட்விக் பற்றி சில வார்த்தைகள்…
அட்விக் ‘புட்டு’ பாடலின் மூலம் பழக்கமானார். இது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது பாடல். இரண்டே நாட்களில் நடனப் பயிற்சி எடுத்துக்கொண்டு, கடினமான ஸ்டெப்ஸையும் சவாலாக ஏற்று ஆடியிருந்தார்.
நான் நடனத்தோடு ஒன்றியிருப்பதால் எனக்கு ஆடுவது சிரமமில்லை. ஆனால், அவர் ஒரு நடிகர். நடனத்தில் தொடர்பயிற்சி இல்லாவிட்டாலும், தீவிர முயற்சியால் ஆடக்கூடியவர். நாடகபாணியில் சொல்ல வேண்டுமானால், ‘கொடுத்து வாங்க’க்கூடிய அளவு கெமிஸ்ட்ரி எங்களுக்குள் இருக்கிறது.
பாடலின் வரிகள் உங்கள் நடனத்துக்கு எவ்விதம் கைகொடுத்தன?
இப்பாடல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை சொல்கிறது. இதே கருத்தில் நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றை தாண்டி, ஏதேனும் நடனத்தில் புதிது செய்யலாம் என நினைத்தோம். காரணம், உமா அண்ணாவின் வரிகள்… மெஜிக் என்றுதான் சொல்லணும். செயற்கையாக அல்லாமல், மிக இயல்பான, பொருத்தமான வரிகள் அவை……
“பெற்றோல் விலை ஏறிச்போச்சு
சைக்கிளில ஓடித்திரி….
கேஸும் இங்கே இல்லையப்பு
பச்சையாக திண்டு முடி….” போன்ற ஒவ்வொரு வரிகளுக்குமான அர்த்தத்தை அபிநயம் காட்டுவது போல் சைகைகளால் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
உங்கள் சொந்த இடம், நடனம் கற்ற விதம் பற்றி கூறுங்கள்…
யாழ்ப்பாணம், ஊரெழு எனது பிறப்பிடம். எனது ஒரு வயதில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து, அங்குள்ள முகாமொன்றில் தங்கியிருந்தோம். வழமையாக முகாமில் நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அண்ணா ஒருவர் நடனமாடுவார். அச்சிறு வயதில் நான் அவரது நடனத்தை ரசித்திருக்கிறேன். ஒருநாள் அவர் என் கைபிடித்து ஆடினார். நான் நன்றாக ஆடியதால் தொடர்ந்து உற்சாகப்படுத்தி என்னை ஆடவைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மறுநாளே அவர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டார். முதல்நாள் என் கைபிடித்து, தோளில் சுமந்து ஆடிய அண்ணா, மறுநாள் இல்லாமல் போனது எனக்குள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் ஏற்படுத்திச் சென்ற ஒருவித அதிர்வு – முகாமில் இருந்த மக்களின் ஊக்கப்படுத்தல் என்னை தொடர்ந்து நடனமாட வைத்தது.
பத்து வயதில் சொந்த இடத்துக்கு திரும்பியதும் அதன் பிறகு பள்ளியில் படிப்பு, நடனக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு, பின்னாளில் நண்பர் கனி மூலம் ஆரம்பமான நடனக்குழுவோடு தொடர்ந்து பாடல் காணொளிகள் செய்து வருகிறோம்.
யாரிடமும் சென்று நான் நடனப் பயிற்சி பெறவில்லை. நானாக தோன்றுவதை ஆடுகிறேன். இப்போது Vibrate Dance Group என்கிற நடன வகுப்பை நடத்தி வருகிறேன்.
நீங்கள் இதுவரை பங்கேற்ற படைப்புகள்….
சிறு சிறு முயற்சிகளுக்குப் பின்னர் ஏணிபோல் எங்களை உயர்த்தியது, உமா அண்ணாவின் ‘புட்டு’ பாடல். பிறகு ‘ஒபரேஷன் வன்னி’, ‘இளந்தாரி’, ‘ஐரா’, ‘பூக்களை போன்றவள்’, ‘கறுத்த பெட்ட’ போன்ற பாடல்களில் அங்கம் வகித்துள்ளேன்.
நீங்களும் பகியும் அருமையாக நடனமாடியிருக்கிறீர்கள்… உங்கள் முக பாவனைகளும் சூப்பர்… யாரையோ பின்பற்றி ஆடுவதைப் போல் தெரிகிறதே….?
நான் யாரையும் பின்பற்றி ஆடவில்லை. கோரியோகிராஃபர் பகி அண்ணாதான். அவரை பார்த்தே நான் ஆடினேன். கரகாட்ட காட்சியில் கரக நடனம்… நண்பர்கள் சந்தித்துக்கொண்ட போது, நாட்டு நடப்பை கதைக்கிறபோது இன்னொரு வகை நடனம் என்று ஆடியிருந்தோம்.
டான்ஸ் மாஸ்டர் பகியை பற்றி கூறலாமே….
பகி அண்ணாவை ‘புட்டு’ பாடலிலிருந்தே தெரியும். ஆட தெரியாதவரையும் ஆட வைத்துவிடுவார். அவருடைய ஸ்டெப்ஸ், அதை சொல்லிக்கொடுக்கும் விதம் பிடிக்கும். கூட ஆடுபவருக்கு என்ன முடியுமோ அதன் போக்கில் நடனப் பயிற்சியளிப்பதில் சிறந்தவர்.
சிவப்புத் துண்டெல்லாம் போட்டு ஆடியிருக்கிறீர்கள்….
சிவப்புத்துண்டு இல்லை, ஷேர்ட். அது ஒரு குறியீடு. “பெற்றோல் விலை ஏறிப்போச்சு” என ஒருவர் சொல்ல, சிவப்பு ஷேர்ட்காரர் “சைக்கிளில ஓடித்திரி….” என நக்கலாக பதிலளிப்பதாய் காட்சி வருகிறது.
உங்களை பற்றியும் சொல்லுங்களேன்… யாரிடமேனும் நடனம் கற்றீர்களா?
சொந்த ஊர் யாழ்ப்பாணம், இணுவில். நான் நடனம் முறையாக கற்கவில்லை. ஏதும் பாடல் காணொளிகள் செய்வதாக இருந்தால், கொரியோகிராஃபரிடம் பயிற்சி எடுத்துக்கொள்வேன்.
எந்தெந்த படைப்புகளில் பணியாற்றியுள்ளீர்கள்?
‘தேசிய உணவு -புட்டு’ பாடல் நான் பங்கேற்ற முதலாவது படைப்பு. அடுத்து ‘ஒபரேஷன் வன்னி’, ‘கொழும்பு நகர்’, ‘ரசிக்கும் சீமானே’, ‘வனரோசா’, ‘ஆழி’, ‘கனவு தேவதை’ என சில படைப்புகளில் பணியாற்றியுள்ளேன்.