ஜம்மு-காஷ்மீரில் லீவ்டோரா கிராமத்தில் பாபி கவுல் என்பவரின் ஒரே ஓர் இந்து குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. மற்றவர்கள் இஸ்லாமிய மக்கள். பாபி கவுலின் கணவர் மகராஜ் கிஷன் கடந்த ஆண்டு இறந்தார். கணவர் இறப்பைத் தொடர்ந்து, வயதுக்கு வந்த இரு மகள்கள் உட்பட நான்கு குழந்தைகளுடன் சரியான வருமானம் இல்லாமல் பாபி கவுல் தவித்தார். இதையடுத்து, உள்ளுர் மக்கள் எம்.எல்.ஏ உதவியுடன் அவருக்கு அரசு வேலை வாங்கித் தந்தனர்.
இந்நிலையில், உடல்நிலைக் குறைவு காரணமாக 44 வயது பாபி கவுல் திடீரென்று இறந்துபோனார். தாயை இழந்த குழந்தைகள் கதறினர். இஸ்லாமிய பெண்கள், அந்தக் குழந்தைகளை அரவணைத்து ஆறுதல் அளித்தனர். இஸ்லாமிய மக்களே முன்னின்று பாபி கவுலுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து உடல் தகனம் செய்தனர். இத்துடன், தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கிராம மக்கள் கருதவில்லை. பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர்.
முதல்கட்டமாகத் தங்களிடம் இருந்த அரிசி, காய்கறிகளை விற்று அதிலிருந்து கிடைத்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தை குழந்தைகள் பெயரில் வங்கியில் செலுத்தினர். மேலும் படிப்பு, உணவுச் செலவையும் கிராம மக்களே ஏற்றுக்கொண்டனர். பாபி கவுலின் வீடு, சேதமடைந்து இருந்தது. தற்போது, அதைக் கிராம மக்கள் புனரமைத்து வருகின்றனர். ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க லீவ்டோரா மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.
தந்தையை இழந்த சமயத்திலும் இதேபோல் நிதி திரட்டி, அந்தக் குடும்பத்துக்கு கிராம மக்கள் உதவியிருக்கின்றனர்.