இந்திய-ஆஸ்திரேலிய தொடர்கள் ஆஷஸ் தொடருக்குப் பிறகு பெருமளவில் ஊதிப்பெருக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இரு அணிகளும் பலதளங்களிலும் நிகராகத் திகழ வேண்டியிருப்பதை சூசகமாக வலியுறுத்துகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிறைய சர்ச்சைகள், நிறைய வாக்குவாதங்கள், ரிவியூ உதவிக்கு ஓய்வறையில் அமர்ந்திருப்பவர்களின் உதவியை நாடி சர்ச்சை உண்டானது என்று ஆஸ்திரேலிய தொடர் என்றால் அதன் வழக்கமான கிளுகிளுப்புகளுடன் இருப்பதுதானே இயல்பு.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரும் இதற்கு விதிவிலக்கல்ல, இந்தத் தொடர் பற்றி ஸ்டீவ் ஸ்மித் ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், பேட்டி பல விஷயங்களைக் கொண்டதாக இருந்தாலும், இந்தத் தொடர் பற்றி ஸ்மித் அந்தப் பேட்டியில் கூறியிருப்பது இதோ:
“ஆம். நான் டிஆர்எஸ். சிக்கலில் அகப்பட்டேன். அது ஒரு பெரிய டெஸ்ட் போட்டி, வெற்றி பெற்றால் நாங்கள் 2-0 என்று முன்னிலை பெறுவோம். எனவே ‘நான் அவுட் ஆகக்கூடாது’என்று என் மனம் கூறிக்கொண்டிருந்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் எனக்கு உதவவில்லை. வேறு வழியின்றி ஏன் அங்கு உதவியை நாடக்கூடாது என்று யாரோ கூறினார்கள். இது தவறுதான் அதற்கு நான் உடனடியாக மன்னிப்பு கேட்டு விட்டேன். ஆனால் நாங்கள் அதனை சில முறை செய்திருக்கிறோம் என்று குற்றம்சாட்டியது என்பது முழு குப்பையான வாதம். எனக்கு அன்று மூளை மங்கிவிட்டது அதனால் அப்படிச் செய்ய நேரிட்டது. இனி அத்தகைய கணங்கள் எனக்கு ஏற்படாது.
இது பற்றி விராட் கோலி என்ன நினைத்துப் பேசினார் என்று எனக்குத் தெரியவில்லை. எனவே நான் ஏற்கெனவே கூறியது போல் அத்தகைய கருத்துகள் எல்லாம் குப்பைக்கூளமே.
அதே போல் பந்து டெட் ஆன பிறகு ஸ்டம்ப் மைக்குகளை ஆன் செய்து வீரர்களிடையே களத்தில் நடக்கும் உரையாடல்களை, வாக்குவாதங்களை ஒட்டுக் கேட்பது மிக மோசமானது. இதனைச் செய்து எங்கள் அணி மீது ஒரு மோசமான பிம்பத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஆனால் இரு அணிகளும்தான் கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்து கொள்கின்றனர், அப்படியிருக்கும் போது ஒருதலைபட்சமாக வெளியிட்டால் அது எங்கள் அணியை மோசமாக காண்பிப்பதாகவே அமைகிறது.
இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது, ஒளிபரப்பாளர்களுக்கு தொடர்ந்து பந்து ஆட்டத்தில் இல்லாத போது ஸ்டம்ப் மைக்குகளை ஆஃப் செய்ய வேண்டுமென்று. ஆனால் அவர்கள் மைக்கை ஆனில் வைத்து நிறைய அழுத்தம் ஏற்படுத்துகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது.
அதே தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியில் நான் நல்ல பார்மில் இருப்பதாக உணர்ந்ததால் கொஞ்சம் விரைவாக ரன் எடுக்க முயன்றேன். நான் மன ரீதியாக களைப்படைந்திருந்தேன். ஆடிக்கொண்டிருக்கும் போது இன்னும் 10 ரன்களை அடிக்கவில்லை என்று திடீரென தோன்றியது, உமேஷ் யாதவ்வை கவருக்கு மேல் தூக்கி அடித்தேன், டெஸ்ட் போட்டியில் நான் இத்தகைய ஷாட்களை ஆடமாட்டேன். இருப்பினும் இந்த மனநிலையிலும் சதமெடுத்தது எனக்கு அதிர்ஷ்டமே. இன்னும் கொஞ்சம் நின்று பெரிய ஸ்கோரை எடுத்திருந்தால் அணிக்கு உதவிகரமாக இருந்திருக்கும். ஆனால் மனதளவில் வலுவிழந்து இருந்தேன், என்னிடம் மீதம் எதுவும் இல்லை என்பது போல் இருந்தது” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.