இந்தியா – கனடா அணிகளுக்கு இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான லியாண்டர் பயஸ் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் யுகி பாம்பரி, சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன், ரோஹன் போபண்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மாற்று ஆட்டக்காரர்களாக பிராணேஷ் குணேஷ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டேவிஸ் கோப்பை போட்டியில் ஆடும் அணியில் லியாண்டர் பயஸ் இடம்பெற்றிருந்தார். ஆனால் இப்போட்டியில் அவர் களம் இறக்கப்படவில்லை. இதனால் இத்தொடரின்போது அவர் பாதியில் வெளியேறினார்.
இந்நிலையில் கனடாவுக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய தேர்வுக்குழு தலைவர் எஸ்.பி.மிஸ்ரா, “வீரர்களின் தரவரிசைக்கு ஏற்ப அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் லியாண்டர் பயஸ் இடம்பெறாவிட்டாலும், அடுத்த தொடர்களில் அவர் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன” என்றார்