இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்களை நடத்துவது குறித்து ஐ.பி.எல். அமைப்பின் தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் வாரியம் நடத்துவதாக ஒப்புக்கொண்ட இருநாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர்களை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்றும், அதனால் தங்களுக்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது குறித்து இந்தியக் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இதுவரை நேர்மறையான பதில் அளிக்கப்படவில்லை.
இந்தச் சூழலில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது குறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜூவ் சுக்லா கருத்துத் தெரிவித்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’பாகிஸ்தானில் உள்ள தற்போதைய சூழல், இருநாடுகள் இடையில் கிரிக்கெட் தொடரை தற்போது மீண்டும் நடத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதேபோல், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்களை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு. இந்தியா, தனது கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருக்கும் நாடு. அவர்களது பாதுகாப்பில் எந்த இடத்திலும் நாம் சமரசம் செய்துகொள்ள முடியாது’ என்றார். மத்தியப்பிரதேச மாநில கிரிக்கெட் சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஜான்சி சென்றிருந்த ராஜீவ் சுக்லா, ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதையும் வேதனையுடன் குறிப்பிட்டார். இதுபோன்ற சூழலில் இருநாடுகள் இடையே கிரிக்கெட் தொடர் நடத்துவது சாத்தியமில்லாதது என்றும் சுக்லா தெரிவித்துள்ளார்.