இங்கிலாந்து அணியை ஊதித் தள்ளிய இந்திய அணி
ஆண்களுக்கான உலகக்கிண்ணம் கபடிப் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நாக் அவுட் சுற்றில் இந்தியா அணியும், பிரித்தானியா அணியும் மோதின. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி வீரர்கள் ஆக்ரோசமாக செயல்பட்டனர். முதல் நிமிடத்தில் பிரித்தானியா சார்பில் ரைடு சென்ற சோமேஸ்வர் காலையா பிரித்தானிய அணிக்கு 2 புள்ளிகளை பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் முதல் ரைடு சென்ற சந்தீப் நார்வல் தன்னுடைய நேர்த்தியான ரைடால் 5 புள்ளிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்தார்.
இதனால் மூன்றாவது நிமிடத்தில் இந்திய அணி 8-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து தங்களுடைய ஆக்ரோச ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி வீரர்களை, பிரித்தானியா வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக இந்திய அணி 30வது நிமிடத்தில் 58-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஆடியது. சற்று கூட பிரித்தானிய அணிக்கு இந்திய வீரர்கள் விட்டுக் கொடுக்காமல் ஆடினர். இறுதியாக இந்திய அணி 39 வது நிமிடத்தில் 69-18 என்ற கணக்கில் பிரித்தானியாவை வீழ்த்தியது.
இதில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய பிரதீப் நார்வல் 13 புள்ளிகள் பெற்றுத் தந்தார். இவருக்கு இணையாக தானும் சளைத்தவன் இல்லை என்பது போல அஜய் தாகூர் 11 புள்ளிகள் பெற்றுத்தந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகக் கிண்ணம் கபடிப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.