ஆஸ்திரேலியாவின் கடலுக்கு அடியில் மேற்கொண்ட புதிய ஆய்வில், பல கோடி ஆண்டுகளுக்கு முன் அங்கு ஏராளமான எரிமலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி அமைப்பு (சிஎஸ்ஐஆர்ஓ), அடிலெய்டு பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்தின் அபர்தீன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலுக்கு அடியில் ஆராய்ச்சி மேற்கொண்டன.
இதில், கடலுக்கு அடியில் 26 எரிமலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஏற்கனவே வெடித்து சிதறியவை. ஏறக்குறைய அனைத்தும் புதைந்து விட்டன. பூமியில் நில அதிர்வை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு முதல் முறையாக கடலுக்கு அடியில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் பல தகவல்கள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
26 எரிமலைகளில் சில 2,000 அடி உயரம் கொண்டவை. மற்றவை 820 அடி உயரம் கொண்டவையாகும். இந்த எரிமலைகள் சுமார் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.இவற்றில் வெடித்து சிதறிய எரிமலை குழம்புகள் கடலில் சுமார் 34 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு படர்ந்திருக்கின்றன.
அவற்றை வைத்து மேற்கொண்ட ஆய்வில், இப்பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பெரும் மலைத்தொடர் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த மலைத்தொடர்கள் எரிமலை வெடித்து சிதறியதில் முழுவதும் புதைந்து, இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் கடலுக்கு அடியில் எண்ணெய் வளம் இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.