யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஆனோல்ட்டைத் தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை முன்மொழிந்தால், அதனைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்கு ஈ.பி.டி.பி. தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சி தொங்கு நிலமையில் உள்ளது. எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. கூடிய ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. அந்தக் கட்சி மேயர் பதவிக்கு ஆனோல்ட்டை நியமிப்பதற்குத் தீர்மானித்தது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தாங்களும் நடவடிக்கை எடுப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அறிவித்தது. யார் ஆட்சி அமைக்கப் போகின்றார்கள் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
ஈ.பி.டி.பி. எந்தத் தரப்பை ஆதரிக்கப்போகின்றது என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவைக் கேட்டோம். வடக்கில் உள்ள இரண்டு சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகள் எல்லாவற்றிலும் தொங்கு ஆட்சிதான் அமையவுள்ளது. அந்தச் சபைகளில் யார் ஆட்சி அமைக்கப் போகின்றார்களோ, அவர்களுக்கு வெளியே இருந்து ஆதரவு வழங்குவோம். மக்கள் நலன்சார்ந்து அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவைத் தெரிவிப்போம்.யாழ்ப்பாணம் மாநகர சபையைப் பொறுத்த வரையில், நிலமை வித்தியாசம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருவரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டால் என்ன செய்வது என்பதை ஆராய்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆனோல்ட்டை அறிவித்திருக்கின்றது. அவர் மீது எமது கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலரிடையே நல்ல அபிப்பிராயம் இல்லை. அவர்களை நான் கட்சிக் கொள்கையையின் அடிப்படையில் செயற்படுங்கள் என்று வற்புறுது்த முடியாது. இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆனோல்ட்டுக்கு எதிராக அவர்களது கட்சியினரே வாக்களிப்பார்கள்.
கூட்டமைப்பு மேயர் பதவிக்கு வேறு ஒருவரின் பெயரை முன்மொழிந்தால் சாதகமாகப் பரிசீலிக்கலாம் என்றார் அவர்.