‘அனைத்து நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது தான் ஆசியான் அமைப்பின் நோக்கம். ஆசியான் – இந்தியா இடையே சுதந்திர வர்த்தகத்துக்கான நடைபாதை போடப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இந்தியா – ஆசியான் மாநாடு குறித்தும் நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டும், பிரதமர் மோடி எழுதியுள்ள கட்டுரை ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளில் வெளியாகும், 27 நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
அதில் மோடி கூறியிருப்பதாவது: அளவையோ, மக்கள் தொகையையோ, வளர்ச்சியையோ வைத்து ஒரு நாட்டை மதிக்கக் கூடாது; அனைத்து நாடுகளும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது தான் ஆசியானின் நோக்கம். இந்தியாவின் பாராம்பரிய கலாசாரமும் இதையே வலியுறுத்துகிறது. அதனால் இந்தியா – ஆசியான் உறவு, போட்டிகள், குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளது.
ஆசியான் – இந்தியா இடையே, சுதந்திர வர்த்தகத்துக்கான நடைபாதை போடப்பட்டுள்ளது. இந்தியா – ஆசியான் உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் முடிந்து 26ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
இந்தியாவின் 69வது குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஆசியான் தலைவர்களை வரவேற்பதில் 125 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர். இந்தியா – ஆசியான் உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் முடிந்திருக்கலாம். ஆனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.
கலாசார ரீதியாக நாம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளோம். இது மேலும் வலுப்பட வேண்டும். கடலோர பாதுகாப்பை நாம் ஒருங்கிணைந்து பலப்படுத்த வேண்டும். அப்போது தான் சுதந்திர கடல் போக்குவரத்தை நாம் துவங்க முடியும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.