ஆகஸ்ட் 15 ரிலீஸில் தனுஷ் Vs விஜய் சேதுபதி
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அனைத்து பணிகளும் முடிந்தவுடன், விரைவில் படத்தை தணிக்கை செய்து விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதலில் ஜூலை மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், ‘கபாலி’ வெளியீட்டால் தற்போது சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராதிகா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தர்மதுரை’ படமும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தனுஷ் தயாரிக்கும் ‘வடசென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது தனுஷ் நடித்திருக்கும் ‘தொடரி’ படத்துக்குப் போட்டியாக விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ படமும் வெளியாக இருப்ப்பது குறிப்பிடத்தக்கது.