அவுஸ்திரேலியாவுக்கு 413 ஓட்டங்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை
காலே மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் இலங்கை அணி, அவுஸ்திரேலியாவுக்கு 413 என்ற இமாலய ஓட்டங்களை வெற்றி இலக்காக கொடுத்துள்ளது.
இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இலங்கை முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 106 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுக்கும், இலங்கை தரப்பில் ஹேராத் ’ஹாட்ரிக்’ உடன் 4 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் 2வது இன்னிங்சை 175 ஓட்டங்கள் முன்னிலையில் தொடங்கிய இலங்கை அணி தட்டுத்தடுமாறி 237 ஓட்டங்கள் எடுத்தது.
தில்ருவான் பெரேரா அதிகபட்சமாக 64 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த இன்னிங்சிலும் முத்திரை பதித்தார்.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே பெரிய அடியாக அமைந்தது.
தொடக்க வீரர் ஜோ பார்ன்ஸ் (2) ஹேரத் சுழலிலும், அடுத்து வந்த நாதன் லயன் (0), உஸ்மான் கவாஜா (0) ஆகியோர் தில்ருவான் பெரேரா பந்திலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் அந்த அணி 10 ஓட்டங்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. இன்றைய ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 25 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அணித்தலைவர் ஸ்மித் (1), டேவிட் வார்னர் (22) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி பந்துவீச்சில் மிரட்டி வருகிறது. இன்னும் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.