உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தை இரண்டு நாட்கள் முற்றுகையிட்டு காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட்டம் செய்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகம் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவிலுள்ள நியூகேஸில் துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து சுமார் 170 கிலோ மீற்றர் (105 மைல்) தொலைவில் அமைந்துள்ள நியூகாஸில் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதியின் மிக முக்கியமான முனையமாகும்.
அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து அங்கு கூடிய 3,000 போராட்டக்காரர்கள் கப்பல் பாதையை 30 மணி நேரம் முற்றுகையிட்டு, கயாக்ஸ் (kayaks) பலகைகளைப் பயன்படுத்தி நீரில் இருந்தனர்.
இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் இருந்து அரை மில்லியன் தொன் நிலக்கரி வெளியேறுவதைத் தடை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் 109 பேரை கைது செய்ததோடு, அதில் ஐந்து சிறுவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையின்படி, திங்களன்று துறைமுகத்தை விட்டு வெளியேற மறுத்த 104 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளரான அவுஸ்திரேலியா, தன் சொந்த நாட்டின் மின்சார உற்பத்திக்கும் பூமிக்கு அடியில் உள்ள புதைபடிவ எரிபொருளை நம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வரும் வியாழக்கிழமை துபாயில் 28 ஆவது காலநிலை உச்சிமாநாடு நடைபெறவிருக்கும் நிலையில் குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் நிலக்கரி ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும் மற்றும் புதிய புதைபடிவ எரிபொருள் திட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என “எழுச்சி அலை” (Rising Tide) அமைப்பு கூறியுள்ளது.