அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (07) இரவு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நடப்பு இருபது 20 உலக சம்பியன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வருகை இலங்கை மக்கள் மத்தியில் சிறு ஆறுதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தம்மை தயார்படுத்திக்கொள்ள அவுஸ்திரேலியாவுடனான தொடரை இலங்கை அணி பயன்படுத்தி அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றிகொண்டு உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற 11 பேரில் இருவரைத் தவிர மற்றைய எல்லோரும் இன்றைய போட்டியில் விளையாட உள்ளனர்.
எனினும், அவுஸ்திரேலிய அணியின் அதிரடிக்கு பதிலடி கொடுக்க கூடிய வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறுவதால் உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் காத்திருப்பதாக அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.
‘நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த அணி என்பதை நாம் அறிவோம். ஆனால், எமது அணியிலும் சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இடம்பெறுகின்றனர். எனவே இந்தத் தொடரில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்’ என்றார் தசுன் ஷானக்க.
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அவுஸ்திரேலியாவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 – 1 என அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தது. எனினும் அந்தத் தொடரில் இலங்கை அணி பலத்த சவாலாக விளையாடியிருந்தது. 2ஆவது போட்டியை சமநிலையில் முடித்த (சுப்பர் ஓவரில் தோல்வி) இலங்கை கடைசிப் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.
கடைசிப் போட்டியில் டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இந்தத் தொடர் இலங்கையில் நடைபெறுவதால் இரசிகர்களின் ஆதரவுடனும் சொந்த மண் அனுகூலத்துடனும் இலங்கை வெற்றிபெற முயற்சிக்கும் என நம்பலாம்.
மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சில் அசத்திய வனிந்து ஹசரங்க, அவுஸ்திரேலியர்களுக்கு பெரும் சவாலாக திகழ்வார் என நம்பப்படுகிறது.
இன்றைய தினம் மழை பெய்யாமல் இருந்தால் ஆட்டம் மிகுந்த பரபபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 2006இலிருந்து 2022வரை நடைபெற்ற 22 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்திரேலியா 12 – 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. சமநிலையில் முடிவடைந்த ஒரு போட்டியில் சுப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இலங்கை கடைசியாக விளையாடிய 12 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 2இல் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா தனது கடைசி 11 போட்டிகளில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி உட்பட 10 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது.
அணிகள் விபரம்
இலங்கை: தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க, குசல் மெண்டிஸ், பானுக்க ராஜபக்ச, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, நுவன் துஷார, மஹீஷ் தீக்ஷன.
அவுஸ்திரேலியா: ஆரொன் பின்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ், க்ளென் மெக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மெத்யூ வேட், மிச்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸ்ல்வூட் (இவர்கள் அனைவரும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியவர்கள்), அஷ்டன் அகார், கேன் ரிச்சர்ட்சன்.