அழிக்கப்பட வேண்டிய ஒன்று ஆழ ஊடுருவி செல்கின்றது! விழித்தெழுங்கள் தடுத்திடுங்கள்..
ஈழப்போரில் சம்பந்தப்பட்ட இலங்கைப்படையின் படையெடுப்பில் ஏற்படுத்தப்பட்ட சிக்கல்களை களைப்பதில் ஐக்கிய நாடுகள் வரை பேசிக் கொண்டிருக்கின்றனர். அவை பல மாற்றங்களை பாதகமாக தமிழரை எதிர் கொள்ள வைத்துள்ளன.
இதேபோரில் உள்நுழைந்த அமைதிப்படையாய் வந்த இந்தியப்படையும் சும்மா போகவில்லை. பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திவிட்டுதான் சென்றுள்ளன.
“இலங்கைப்படை புத்தரை விட்டுச் செல்ல இந்தியப்படை சீமைக்கருவேலத்தை விட்டுச் சென்றுள்ளன. இரண்டுமே தமிழரை ஆக்கிரமிக்கிறது எனக் கூறுகின்றனர்.
இவற்றில் அவர்கள் விட்டுச் சென்ற ஆட்டுத்தீவனமான சீமைக்கருவேலை மரம் இன்று ஒரு சூழல் வைரஸாக படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
விடுதலைப்புலிகளின் படைகள் எவ்வாறு சூழலைப்பாதுகாக்கவும் பாதுகாத்தும் வந்ததோ அதற்கு மாறாக வடகிழக்கு எதிர் திசையில் பயணித்துவரும் நிலையில் இந்தியா தந்த சீமைக்கருவேல மரமும் மிக வேகமாக பரவிவருகிறது.
இந்தியப்படை எங்கு எல்லாம் அதிகளவில் நிலை கொண்டிருந்ததோ அங்கு எல்லாம் சீமைக்கருவேலம் மரம் தனது படை நடவடிக்கையை பரப்பி வருகின்றன.
இது சூழலுக்கு மிகப்பாதகமான மரமாக இலங்கை சூழல் ஆய்வாளரகள் கணித்திருக்கும் நிலையில் கடந்த சில மதங்களாக தமிழ் நாட்டில் பல ஊடகங்கள் இதன் தாக்கம் பற்றிய சிறப்பு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றன.
இந்தியாவில் அழிப்பு நடவடிக்கைக்கு என 809 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அழிக்கும் மரங்களை விற்பனை செய்வதால் 120 கோடி மாத்திரமே கிடைக்குமாம்.
மனிதனின் சுவாசத்திற்குதவாத காபனீர் ஒட்சைட்டை வெளியிடும் இந்த மரங்கள் மிக வேகமாக பரவும் தன்மையைக் கொண்டதும் நிலத்தின் தன்மையை வேகமாக மாற்றவும் கூடியது. பொதுவாக சூழலுக்கு இது ஒரு நச்சுத்தாவரமாகவே வர்ணிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் வடக்கு கிழக்கில் குறிப்பாக மன்னார் திருகோணமலை போன்ற பல இந்திய முகாம்களில் விநியோகப்பிரிவுகள் செயற்பட்ட இடங்களில் இந்த கருவேல மரம் அறுகுபோல் பெருகிவருகின்றன.
இந்தியப்படைகள் வந்தபோது அவர்களுக்கான இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு வந்தார்கள். அந்த ஆட்டின்தேவைக்காக கொண்டுவரப்பட்டதே இந்த சீமைக்கருவேலமரம் என கூறப்படுகின்றது.
இதன் மரத்தின் தன்மை வேல மரத்தை ஒத்ததாக விருந்தாலும் மிகுந்த பச்சையத்துடன் மிக அடர்ந்து பரந்து வேகமாக வளர்கின்றன.
இந்த நிலையில் திருகோணமலையின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு நுழைவாயிலாக இருந்த கட்டைபறிச்சான் பிரதான இராணுவத்தளம் அமைந்திருந்த பகுதியில் இலங்கை இராணுவம் தற்போதும் நிலைகொண்டுள்ளது.
இங்கு முன்னர் இந்தியப்படை நிலை கொண்டிருந்தது. இந்த முகாம் பகுதியைச் சுற்றி கருவேலை மரம் தனது படை நடவடிக்கையை வேகமாக நகர்த்தி வருகின்றன.
தோட்டப்பிரதேசமாக கருதப்படும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த மூதுார் கிழக்கை இது வேகமாக ஆக்கிரமிக்கும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
இலங்கையில் வேகமாக இச் சீமைக்கருவேலம். கட்டைபறிச்சானில் இனங்காணப்பட்டுள்ளன. இப்போது பழம் சொரியும் பருவம். ஏராளம் விதைகள் வளமான மண்ணில் முளைவிடும் அபாயம்.
நூறு பயன்தரு மரங்களை நடுவதிலும், ஒரு சீமைக்கருவேலம் மரத்தை அழிப்பதும் மேலான பலன் தரும். என ஆய்வார்கள் கூறுகின்றனர். இதன்வேர்கள் ஆழ ஊடுருவும் தன்மை கொண்டவை.
இதனால் இங்குள்ள பொலிகை எனும் சஞ்சிகை விஷேடமான விழிப்புணர்வு இதழ் ஒன்றை மக்கள் மத்தியில் விநியோகித்து இதன் தாக்கம் பற்றி விபரித்து வருகின்றது.
இதன் ஆசிரியர் புண்ணிய மூர்த்தி ஜெயாகரன் என்ற இளைஞர் இந்த படைக்கெதிராக தனது தனிப்பட்ட முயற்சியால் இதனை ஒரு போராட்டமாக ஆரம்பித்து செய்து வருகின்றார்.
இதன் தாக்கம் பரம்பல் பற்றி அய்வுகளையும் தேடல்களையும் செய்து அவர் மக்களை தனது சஞ்சிகை குறிப்பு மூலம் தெளிவூட்ட முயற்சித்து வருகின்றார்.
மரத்தின் சிறிய செடி..
முளைத்து சுமார் 10 நாட்களே ஆன இந்த செடியின் வேரின் நீளம் அந்தச் செடியின் உயரத்தைவிட அதிகமாக உள்ளது எனில் நன்றாக வளர்ந்த மரத்தின் வேர் எவ்வளவு ஆழம் செல்லும், எவ்வளவு நீரை உறிஞ்சும் என்பதை யோசித்து பாருங்கள்.
எனவே முடிந்தவரை உங்கள் அருகில் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்றுங்கள். அல்லது அகற்றுவதற்கு உதவி செய்யுங்கள்.
நிலத்தடி நீரை சேமிக்க உதவுங்கள். என அவர்கள் கோரிவருகின்றனர். எனவே வடகிழக்கை ஆக்கிரமிக்க வல்ல இந்த படை எச்சத்தை அழிக்க சகலரும் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளன. மன்னாரில் திருக்கேதிஸ்வரம் தள்ளாடி முகாம் பிரதேசம் இதனால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதுபோன்ற பல தாக்கங்களை படைகள் விட்டுச் சென்றுள்ளன. ஆனால் நாம் தினமும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம்.