நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் குறித்தும் இந்த விவகாரத்தில் சதித்திட்டம் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, அநுரபிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த ஆகிய மூவரை உள்ளடக்கியே இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்தும் அதற்கான காரணங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். இந்திய எண்ணெய்க் கம்பனி கொண்டு வந்த கப்பலில் தரமற்ற எரிபொருள் இருந்தமையினால் அதனை நிராகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இதேபோன்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைவிட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையால்தான் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ஆனாலும் இந்திய எண்ணெய் கம்பனி தரம் குறைந்த எரிபொருளை கொண்டுவந்தமை மற்றும் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திற்கான எரிபொருள் நிரப்பிய கப்பல் இலங்கையை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதில் ஏற்பட்ட கால தாமதம் போன்ற விடயங்களில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என்று ஆராயவேண்டுமென்று அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து எரிபொருளுக்கான தட்டுப்பாடு குறித்தும் அதற்கான காரணங்களில் ஏதேனும் சதி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு மூன்று அமைச்சர்களைக் கொண்ட குழுவினை ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்தக்குழு இந்த விடயம் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து இந்த விடயம் குறித்து நீண்டநேரம் ஆராய்ப்பட்டுள்ளது. இதன்போது பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுணரணதுங்க மீது பல அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடியும், அமைச்சர் அர்ஜுணரணதுங்கவும் பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வாராவாரம் அறிக்கை பெறப்படவேண்டும். எந்த வித நிலைமையையும் சமாளிக்கும்வகையில் 21 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் எப்போதும் சேமிப்பில் இருக்கவேண்டியது வழமையாகும். ஆனால் அந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படவில்லை. இதனால்தான் பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் இந்திய எண்ணெய்க்கம்பனி 14 வீதத்தைத்தான் கையாள்கின்றது. எனவே இந்திய எண்ணெய்க்கம்பனி தரமற்ற எரிபொருளை கொண்டுவந்தது என்பதற்காக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவேண்டிய அவசியம் நாட்டில் இல்லை. உரிய செயற்றிட்டத்தை பின்பற்றாமையினாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றும் அமைச்சர்கள் இதன்போது விசனம் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிந்தால் அல்லது எரிபொருள் கப்பல் தாமதம் அடையும் என்பதை அறிந்திருந்தால் உடனடியாக இந்தியாவுடன் தொடர்புகொண்டு மூன்று நாட்களில் எரிபொருளை கொண்டுவந்திருக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் சில அமைச்சர்கள் தமது அதிருப்தியினை தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அர்ஜுணரணதுங்க இந்திய எண்ணெய்க் கம்பனி பிரச்சினைகளை ஏற்படுத்தி தரம் குறைந்த எரிபொருளை இலங்கையில் விற்பனை செய்வதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு அனுமதிக்க முடியாது. ஆனாலும் எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.