மக்கள் கோரும் அரசியல் மறுசீரமைப்பு ஏற்படாதவரை சர்வதேச நாடுகளின் உதவிகள் கிடைக்கப்போவதில்லை. அத்துடன் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை நிர்வகிக்க விலை கட்டுப்பாடு அத்தியாவசியமாகும். ஆனால் இந்த அரசாங்கம் விலை கட்டுப்பாட்டை கைவிட்டுள்ளது என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரின் விசேட உரை மீதான சபை ஒத்தவைப்பு வேளை பிரரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் விலை கட்டுப்பாடு இல்லை. அரசாங்கம் விலை கட்டுப்பாட்டை கைவிட்டுள்ளது. அதனால் பொருட்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்து செல்கின்றது.
கடந்த மாதம் 380 ரூபாவுக்கு இருந்த 400 கிரேம் பால்மா இன்று ஆயிரத்தி 20 ரூபாவாகவும் , 16 ரூபாவுக்கு இருந்த முட்டை 50 ரூபாவாகவும் 120 ரூபாவுக்கு இருந்த சீனி 250 ரூபாவாகவும், 92 ரூபாவுக்கு இருந்த கோதுமை மா 255 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு நூற்றுக்கு 300 வீதம் விலை அதிகரிக்க பட்டிருக்கின்றது. அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை நிர்வகிக்க விலை கட்டுப்பாடு அத்தியாவசியமாகும். கடந்த காலங்களில் விலை கட்டுப்பாட்டு தினம் என ஒருநாளை ஒதுக்கி, நகரங்களில் கடைகளுக்கு சென்று பொருட்களின் விலை தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது.
ஆனால் இன்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாட்டின் பிரச்சினைகளை செய்தி வாசிப்பது போன்று தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்கு தீர்வுகள் இல்லை.
சோற்றுப்பானையை அடுப்பில் வைத்து கடைக்கு செல்ல முடியாது. அதனை திருடும் நிலையே நாட்டுக்கு ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரை மொட்டு கட்சி ஏற்றுக்கொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரி என்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் பிரதமர் நாட்டின் டொலர் பிரச்சினை குறித்து தெரிவித்திருந்தார். ஆனால் டொலரை எவ்வாறு பெற்றுக்கொள்வது என தெரிவிக்கவில்லை. பணம் இல்லாவிட்டால் அச்சிடலாம். டொலர் அச்சிடமுடியாது.
சர்வதேச நாணய நிதியங்கள் வங்கிகளிடம் நாங்கள் உதவிகளை கேட்டோம். ஆனால் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்றே அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
பிரதமரின் உரையிலும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் அரசியல் மறுசீரமைப்பு என்பது மக்கள் கோரும் மறுசீரமைப்பே ஏற்படுத்த வேண்டும் என்றே சர்வதேச நாடுகள் கோரி இருக்கின்றன.
மக்களின் கோரிக்கையாக இருப்பது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கவேண்டும் என்பதாகும். அதற்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு சென்றால் 75வீதமானவர்கள் அதனை ஆதரிக்கின்றனர். அதனை தற்போது செய்ய முடியாது என்றால்.
நாட்டின் ஜனாதிபதியை ஏன் சட்டத்துக்கு கீழ் படியும் வகையில் செய்ய முடியாது? ஜனாதிபதி முறை ஆரம்பிக்கப்பட்டது முதல் எமது நாட்டில் ஜனாதிபதி சட்டத்துக்கு மேலாகவே இருந்தார். எமது நாட்டில் மாத்திரமே ஜனாதிபதியின் அதிகாரம் சட்டத்தை மீறி செல்கிறது. அதனால் அரசியலமைப்பு திருத்தத்தின் போது இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
எனவே சர்வதேச நாணய நிதியங்களில் நாங்கள் உதவிளை பெறுவதாக இருந்தால் அவர்களின் பிரதான கோரிக்கையான அரசியல், மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும்.
அரசியல் மறுசீரமைப்பு மக்கள் கோரும் மறுசீரமைப்பாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாங்கள் எதிர்பார்க்கும் உதவிகளை சர்வதேச நாணய நிதியங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் நாட்டை கட்டியெழுப்ப இதுவரை எந்த உதவியும் சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கப்பெறவில்லை.
குறைந்த பட்சம் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களிடமாவது இந்த அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாமல் போயிருக்கின்றது.
ஏனனெனில் அமைச்சரவையின் பிரதானி கோத்தாபய ராஜபக்ஷ்வாகும். தவறு செய்த நபர் இன்னும் அந்த இடத்தில் இருக்கின்றார்.
அதனால் இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும். அவர் அமைச்சரவையின், அரசாங்கத்தின் பிரதானியாக இருக்கும் வரை சர்வதேசத்தின் உதவி கிடைகப்போவதில்லை. ஏனெனில் சர்வதேசம் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்பு இடம்பெறுவதில்லை என்றார்.