அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் கடைகள் மீது இனவாத நோக்கில் தாக்குதல் நடத்தப்படுகையில் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், பாராமுகத்தோடு நடந்துகொண்ட பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சட்டம், ஒழுங்கு அமைச்சரான தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிங்கப்பூரிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு நாடு திரும்பிய தலைமை அமைச்சர் ரணில், அம்பாறைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், கபீர் ஹாசிம் மற்றும் பொலிஸ்மா அதிபருடன் அவசர சந்திப்பொன்றை நடத்தினார். அதிலேயே இவ்வாறு கூறினார்.
பொலிஸாரின் முன்னிலையிலேயே சம்பவம் நடைபெற்றமை, சாதாரண சட்டத்தின் கீழ் சிலரைக் கைது செய்தமை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்கு பொலிஸார் உடந்தையாக இருந்தமை, பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களையும் கைது செய்யாமை, சூத்திரதாரிகள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான முஸ்தீபுகளை பொலிஸார் மேற்கொண்டமை என்று சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸாரே இந்தச் சம்பவத்தின்போது சட்டத்தை மீறி பாரபட்சமாக நடந்துக்கொண்டமை குறித்து மேற்படி அமைச்சர்கள் கடுந்தொனியில் தலைமை அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலமை தொடர்ந்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சானது நாட்டில் கேலிக்கூத்தாகி விடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். பொலிஸார் மீது சிறுபான்மைச் சமூகம் தற்போது நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு உகந்ததல்ல எனவும் அவர்கள் தலைமை அமைச்சரிடம் கூறிப்பட்டது.
இது தொடர்பில் பாரபட்சமாக நடந்துகொண்ட பொலிஸார் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக துரிதகதியில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இனிமேல் இவ்வாறான இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர்களிடத்தில் உறுதியளித்தார்.