அமெரிக்காவில் 8 இளம்பெண்களை கடத்தி சிறை வைத்திருந்த ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபருக்கு 205 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அங்குள்ள நீதிமன்றம்.
அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் குடியிருந்து வருபவர் கெண்ட்ரிக் ராபர்ட்ஸ். 33 வயதான இவர் இளம்பெண்களை ஆசை வார்த்தைகள் கூறியும் மொடலிங் துறையில் வேலை வாங்கித்தருவதாகவும் நம்ப வைத்து பல பெண்களை சிக்க வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், குறித்த நபர் தனது வலையில் விழும் பெண்களை வைத்து இரவு விடுதிகளில் பணியில் அமத்தி பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி மறுப்பு தெரிவிக்கும் பெண்களை கொலை செய்துவிடுவதாகவும் உருச்சிதைவு செய்வதாகவும் மிரட்டியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
அட்லாண்டா பகுதியில் அமைந்துள்ள குறித்த நபரின் குடியிருப்பில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டிருந்த 8 பெண்களில் ஒருவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், தமது மார்பகங்களை வெட்டி வீச கும்பல் ஒன்றிற்கு பணம் தரவும் அஞ்ச மாட்டோம் எனவும் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் இளம்பெண்களின் குற்றச்சாட்டுகளை மறுத்த கெண்ட்ரிக்கின் வழக்கறிஞர், கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த பெண்கள் ஏன் அங்கிருந்து தப்பிச்செல்ல துணியவில்லை, மட்டுமின்றி குறித்த பெண்களில் ஒருவர் தமது தாயாருடன் சுற்றுலா செல்ல பணம் பெற்று சென்றுள்ள சம்பவமும் நடந்துள்ளது என அவர் வாதிட்டுள்ளார்.
கெண்ட்ரிக்கின் மீது சுமத்தப்பட்ட சில வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகள் ஆட்கடத்தல் வழக்கில் போதிய ஆதாரம் இருப்பதாகவும், சட்ட விரோதமாக ஆயுதம் பதுக்கிய குற்றத்திற்காகவும் ஒட்டுமொத்தமாக 205 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.