அமெரிக்காவில் அதிரடி!! 8 பேருக்கு மரண தண்டனை….
அமெரிக்காவின் ஆர்கென்ஸா மானிலத்தில் பத்து நாட்களுக்குள் மரண தண்டனைக் கைதிகள் எண்மருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஆர்கென்ஸாவில் மொத்தமாக 34 மரண தண்டனைக் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதில், நான்கு கறுப்பினத்தவரும் நான்கு வெள்ளையர்களுமே பத்து நாட்கள் இடைவெளியில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளனர்.
இவர்கள் எண்மரும் 1989 முதல் 1999ஆம் ஆண்டு காலப் பகுதியில் தண்டனை பெற்றவர்களாவர். இவர்களின் தண்டனை சுமார் இரண்டு தசாப்தங்களாக நிலுவையிலேயே நீண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஆர்கென்ஸா ஆளுனராகப் பதவியேற்ற ஆஸா ஹட்சின்சன் உடனடியாக தண்டனைகளை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17, 20, 27 மற்றும் 27 ஆகிய தினங்களில் தலா இருவர் வீதம், கிடைப்பதற்கு அரிதான விஷ மருந்தை ஊசி மூலம் செலுத்தி தண்டனை நிறைவேற்றப்படவுள்ளனர்.
ஒரே நாளில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதே வழக்கத்துக்கு மாறானதாகக் கருதப்படும் நிலையில், பத்து நாட்களுக்குள் எட்டுப் பேர் மீது தண்டனை நிறைவேற்றப்படுவது முற்றிலும் அபத்தமானது என்று எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியுள்ளன.