அப்போ இலங்கை.. இப்போ இங்கிலாந்து: புதிய வரலாறு படைத்த இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ஓட்டங்களை சேர்த்தது.
இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி லோகேஷ் ராகுல் (199), கருண் நாயர் (303) ஆகியோரின் அபார ஆட்டத்தால் இமாலய ஓட்டங்களை சேர்த்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.
இதுதான் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.
இதற்கு முன்னர் கடந்த 2009ல் மும்பையில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 726 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.