பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்திய அபிநந்தனின் மிக் 21 ரக விமானத்தை மற்றொரு எப்-16 ரக விமானத்தின் அம்ரான் ரக ஏவுகணை தாக்கியது. அதைத்தொடர்ந்து, போர் விமானத்தில் இருந்து எஜக்ட் ஆன அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.
கிட்டத்தட்ட 50 மணி நேரம் பாகிஸ்தானில் இருந்த அபிநந்தனை முதலில் உடல்ரீதியாகச் சித்ரவதை செய்யவில்லை என்று சொல்லப்பட்டது. இப்போதோ, உடல்ரீதியாக அவரைத் துன்புறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்திலிருந்து எஜக்ட் ஆன பிறகு, அபிநந்தனை பாகிஸ்தான் மக்கள் சிலர் தாக்கினர். உடனடியாக அவருக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. மேலும், உடல்ரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவரை நீண்ட நேரம் நிற்க வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக, இந்திய போர் விமானங்கள் பயன்படுத்தும் சங்கேத குறியீடுகள், விமானப்படைத் தளங்களின் ரகசியங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள முயன்றுள்ளனர்.
அதோடு காதுக்கு அருகே ஸ்பீக்கர்களை அதிக சத்தத்தில் அலற விட்டும் அபிநந்தனுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். தண்ணீரை மேலே ஊற்றி அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.
அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 குழுக்கள் விசாரணை நடத்தியுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருந்துள்ளனர். முதல் 24 மணி நேரத்தில் கொடூரமாக விசாரித்துள்ளனர். பின்னர், ஓரளவுக்கு விசாரணை முறை மாறியுள்ளது.இந்தத் தகவலை இந்திய விமானப்படை அதிகாரிகளிடத்தில் அபிநந்தன் தெரிவித்துள்ளார்.