அன்று தெரியும் நான் யாரென்று: ஜெயலலிதாவை போல் அதிரடிக்கு ரெடியான சசிகலா
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தான் வகிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அதிமுக-வைச் சேர்ந்த பலரோ சசிகலாவின் குரலையே தாங்கள் கேட்டதில்லை, அவர் எப்படி அதிமுக பொதுச் செயலாளர் என்று வசைபாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ கூட சமூகவலைத்தளங்களில் உலா வந்தன.
இது குறித்து இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத சசிகலா, தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 29ம் திகதி சென்னையில் நடைபெற உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறும் இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் ஏதேனும் சலசலப்பு ஏற்படுமா என்ற அச்சமும் உள்ளது. எதுபற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும்? யார் அடுத்த பொதுச் செயலாளர் என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், ஜெயலலிதா இருந்த இடத்தில் இருந்து உரையாற்ற சசிகலா தயாராகி வருவதாகவும், அதற்கான உரைகள், அவரது குடும்பத்தின் முக்கிய நபர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை தன்னுடைய குரலைக் கூட கேட்டதில்லை என்று சொன்னவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா தயாராகி வருகிறாராம்.
அதுமட்டுமின்றி இந்த பேச்சில், ஜெயலலிதா பாணியில் ஒரு குட்டிக் கதையும் அவர் தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.