அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம்
இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் , கட்சியின் பொதுச் செயலாளராக மறைந்த தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலாவை நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று (வியாழக்கிழமை) காலையில்அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் பொதுக்குழு தொடங்கியது. காலை 8 மணி முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்துக்கு வரத் தொடங்கினர்.
காலை 9 மணி அளவில் முதலைமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வருகை புரிந்தார்.
பின்னர். 9.30 மணி அளவில் தொடங்கிய தொடங்கிய அதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறைந்த தமிழக முதலைமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தின் போது அஇஅதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் தம்பித்துரை, தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 23 பொதுக்குழு உறுப்பினர்களால், மறைந்த தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான வி. கே. சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்கள் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ”அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை நியமிக்க கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை வி.கே. சசிகலாவுக்கு தெரியப்படுத்த நாங்கள் இப்பொது போயஸ் கார்டன் இல்லம் செல்கிறோம்” என்று கூறி விட்டு அங்கிருந்து போயஸ் கார்டன் புறப்பட்டுச் சென்றார்.