அதிகார கோட்டை தம்மை விட்டு போய்விடும் என அஞ்சும் ராஜபக்சவினர்..!
விமானங்கள் தரையிறங்காத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம் என்பவற்றை ஹம்பாந்தோட்டை மக்கள் கேட்கவில்லை எனவும் அவர்கள் தொழில் வாய்ப்புகளையும் வறட்சிக்கு தண்ணீருமே கோரியதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது ராஜபக்சவினரின் கனவை நனவாக்குவது என்றும் அவர்கள் இதற்காக பெருந்தொகை கடனை பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பெற்ற கடனை திரும்ப செலுத்தும் தவணை காலம் நெருங்கும் தருவாயில்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலை நடத்தினர்.
அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முழு கடனையும் மக்களே செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும்.
அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இதற்கு தீர்வை தேட தீர்மானித்தோம். மக்கள் மீது சுமையை ஏற்ற நாங்கள் விரும்பவில்லை.
இதனால், திட்டமிட்ட வகையில் இந்த கடனை செலுத்த நாங்கள் சீனாவுடன் இணைந்தோம். துறைமுகத்தை நாங்கள் சீனாவுக்கு எழுதிக்கொடுக்கவில்லை. உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவே நாங்கள் தீர்மானித்தோம்.
இந்த உடன்படிக்கை மூலம் கப்பல்கள் வராத துறைமுகத்திற்கு கப்பல்கள் வர ஆரம்பிக்கும். மத்தள விமான நிலையத்தை விமானங்களால் நிரப்ப முடியும். துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பன பணிகள் நிறைந்த இடமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.
இது நடந்து விட்டால், அதிகார கோட்டை தம்மை விட்டு போய்விடும் என ராஜபக்சவினர் அஞ்சுகின்றனர். இது நடந்து விட்டால், மக்களுக்கு ராஜபக்சவினர் தேவைப்பட மாட்டார்கள். அரசாங்கத்திற்கு இதன் மூலம் எந்த செலவுகளும் இன்றி 20 வீத வருவாய் கிடைக்கும்.
ராஜபக்சவினர் நிலத்தை மாத்திரமல்ல, வான் பரப்பையும் எழுதிக்கொடுத்தனர். நாங்களே அதனை குத்தகை முறைக்கு மாற்றினோம். சிறந்த கொடுப்பனவை வழங்கியே நாங்கள் காணிகளை பெற்றோம்.
ராஜபக்சவினர் எவ்வளவு காணிகளை கையகப்படுத்தினர். தற்போது அவர்கள் நித்திரையில் இருந்து விழித்தவர்களை போல் கத்துகின்றனர்.
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எதிரானவர்களே இதனை எதிர்க்கின்றனர். தமது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்த இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்க முயற்சித்து வருகின்றனர் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.