அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அட்லாண்டா விமான நிலையத்தின் அருகில் உள்ள துணைமின் நிலையம் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமானங்கள் ரத்தானதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். வெளியூருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் என்ன நடந்தது என அறியாமல் விமான நிலையத்தில் இருளில் சிக்கித் தவித்தனர்.
மின்வெட்டு ஏற்பட்டு 9 மணி நேரம் கழித்தே அட்லாண்டா மேயர் காசிம் ரீட், துணைமின் நிலையம் தீவிபத்தில் எரிந்தது குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
அதன்பின் விமான நிலையத்தில் தவித்த பயணிகளுக்கு உணவு வழங்கி நகரில் உள்ள விடுதிகளில் தங்க வைத்தனர். மற்றொரு துணைமின் நிலையத்தில் இருந்து தற்காலிகமாக விமான நிலையத்துக்கு மின்வசதி செய்துகொடுக்கப்பட்டதால் மீண்டும் விமானங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.