சிங்காரபுரி என அழைக்கப்பட்ட வரலாற்றுப்பெருமை மிக்க அட்டப்பள்ளம் சம்பவத்தால் அம்பாரை மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொத்தளித்துள்ளனர். இச்செயற்பாடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாரை நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமி அபகரிப்பு முறுகல் நிலையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
அட்டப்பள்ளம் கிராமம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொடக்கம் முற்றிலும் தமிழர்கள் வாழ்ந்த பழம்பெரும் பிரதேசம். வன்னிய இராஜசிங்கன் மன்னன் காலத்தில் அமைக்கப்பட்ட அட்டப்பள்ளம் சிங்காரபுரியம்மன் மற்றும் மீனாட்சி அம்மன் ஆலயம் இதற்கு சிறந்த உதாரணம். இவ்வாறு பரம்பரையாக இந்த பிரதேசத்தில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்செயல் நடவடிக்கையின் காரணமாக கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆயினும் பல குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறாது இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் கிராமத்தின் கடற்கரையை அண்டியதான பிரதேசத்தில் அமைந்துள்ள காணியை சோழகாலம் தொடக்கம் மயானமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மயானத்தை கூட விட்டு வைக்கமுடியாத மனிதாபிமானமற்ற முஸ்லிம் பெரியவர் ஒருவர் மயானத்தையும் தனது பூமி என கூறி பெறுவதற்கு கடந்த பல வருடமாக முயற்சிக்கின்றார். பிரேதங்கள் புதைக்கப்பட்ட புதை குழிகளுக்கு மேலாக வேலியை போட்டு மனச்சாட்சி அற்ற செயற்பாட்டையும் மேற்கொண்டுள்ளார்.
அவரது முயற்சி மக்களின் பல எதிர்ப்பிற்கு மத்தியில் நிறைவுறாத நிலையில் நீதிமன்ற உத்தரவு என கூறி சமரசப்பேச்சு வார்த்தைக்கு மக்களை நேற்றுமுன்தினம்(01) அழைத்த நிந்தவூர் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர், உள்ளிட்டவர்கள் காணியை பெறுவதற்கு முயற்சிப்பவரின் வாகனத்திலே அட்டப்பளத்திற்கு சென்று ஆலய தலைவர் உள்ளிட்ட மக்களை அழைத்து பேசியுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தியோகத்தர்கள் எவரும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வருகைதராத நிலையில் காணி தொடர்பிலான பிணக்கை தீர்க்க அதிகாரமில்லாத உதவிப்பிரதேச செயலாளர் அழைத்த போது தமது மயானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என கூறிய மக்கள் எதிர்ப்பினை வெளியிட்ட நிலையிலேயே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் சம்மாந்துறை பொலிசார் ஆகியோருடன் கலந்துரையாடிய நான் சமாதானமாக பிரச்சினையை பேசிதீர்ப்போம் என நேற்றுமுன் (02) மாலை கூறிய நிலையில் குறித்த 23 அப்பாவி தமிழ் மக்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க அரச அதிகாரி ஒருவர் எவ்வாறு பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்டவரின் வாகனத்தில் செல்வதும் அவர் சார்பாக கருத்துக்களை கூற முயற்சிப்பதும் என நான் வினவுவதோடு சமரசம் என கூறிவிட்டு அப்பாவி மக்களை அழைத்து சிறையில் அடைப்பது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.
இந்நடவடிக்கையானது ஒட்டுமொத்தமாக அங்கு வாழும் தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகவே நான் கருதுவதுடன் அங்கு வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளித்த வாக்குகளுக்கு கிடைத்த பரிசாகவும் கருதுகின்றேன்.
ஆகவே ஜனாதிபதி பிரதமர் நல்லிணக்க அமைச்சு உள்ளிட்டவர்கள் இவ்விடயம் தொடர்பில் தலையீடு செய்து கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்வதுடன் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் அம்பாரை மாவட்டம் மட்டுமல்லாது இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் கி.ஜெயசிறில் அம்பாரை மாவட்ட இந்து இளைஞர் மன்றம் மற்றும் இந்துமாமன்றம் போன்ற அமைப்புக்களும் குறித்த சம்பவம் தொடர்பில் தங்களது அதிருப்தியை வெளியிட்டு நிலையில் அவர்களும் அட்டப்பளம் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.